மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 25.02.2026. இந்தக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும், மக்களுக்கு தேவையான முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாதது கவலைக்கிடமானது. மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு , இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் அமைச்சரான சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை–மனித மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இப்பிரதேசம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றாடல் அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் அதே பிரச்சினைகள் குறித்து மீண்டும் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த மோதலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருவதுதான். இதன் விளைவாக காடுகளில் வாழும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், யானைகள் வருவது மட்டும் நிச்சயம். சமீபத்தில் வாழைச்சேனையில் ஏற்பட்ட சம்பவம் இதற்கு சான்றாகும்.
மேலும், மகாவலி திட்டத்தை முன்னிறுத்தி பாரிய அளவில் மண் அகழ்வு நடைபெற்று வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரப் பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதையும் நான் சுட்டிக்காட்டுகிறேன்.
தொடர்ச்சியான கனமழை மற்றும் முன்பு ஏற்பட்ட புயல் காரணமாக மாவட்டத்தில் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வயல் வெட்டும் காலத்தில்கூட விவசாயிகள் நெல் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரநெல் 5,000 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிவாரணம் பெற முயன்றபோது 2026 பெப்ரவரி 13 ஆம் தேதி காப்பீட்டு காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் நிவாரணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அநியாயமான நிலை.
நெல் கொள்வனவில் ஈடுபடும் சில பெரிய வர்த்தகர்கள் ஆடம்பர வாகனங்களும் ஹெலிகொப்டர்களும் வரை வாங்கும் நிலையில் உள்ளனர். ஆனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது உற்பத்தியைச் சந்தைப்படுத்த முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அரசியல் அல்லது நிர்வாக மட்டத்தில் மறைமுகச் செயற்பாடுகளா என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும், மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தலைமையிலான உள்ளூராட்சி சபைகள் முன்வைக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் தரப்பில் தாமதம் நிலவுகிறது. தமிழரசுக் கட்சி சார்ந்த உள்ளூராட்சி அமைப்புகள் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதைத் தடுக்க முயற்சி நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.
No comments: