News Just In

2/21/2026 08:57:00 AM

காரைதீவில் மூன்று மாதங்களாக ஒளிராத மின் விளக்குகள் சீரமைப்பு : யானை அச்சுறுத்தலையும் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை

காரைதீவில் மூன்று மாதங்களாக ஒளிராத மின் விளக்குகள் சீரமைப்பு : யானை அச்சுறுத்தலையும் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை



நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட காரைதீவு எல்லையான மாவடிப்பள்ளி பெரிய பாலத்திலிருந்து மாவடிப்பள்ளி ரஹ்மானியா பள்ளி (சியாரம்) வரையிலான பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் கடந்த மூன்று மாதங்களாக ஒளிராது காணப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அசௌகரியத்தையும் பாதுகாப்பு சிக்கல்களையும் எதிர்கொண்டனர்.

குறிப்பாக, அண்மைக் காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இருள் சூழ்ந்த இந்த வீதி பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் அபாயம் நிலவிய நிலையில், மின் விளக்குகள் செயலிழந்திருந்தமை பாதுகாப்பு சவாலாக மாறியிருந்தது.

இந்நிலையை உணர்ந்து, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி அவர்கள், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து, கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் அவர்களின் விரைவான தலையீட்டின் மூலம், இன்று (20) குறித்த மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ஒளிரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் இரவு நேரப் பயணங்கள் பாதுகாப்பாக அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், யானை அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்த உதவியாக அமையும் என பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இக்குறித்த பிரச்சனைக்கு துரித தீர்வு வழங்க ஒத்துழைத்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை பொறியியலாளர் எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றியும் பாராட்டுதலும் தெரிவிக்கப்படுகின்றன.

No comments: