News Just In

2/27/2026 06:42:00 AM

கைதுகளை விமர்சிப்பதால் ஈஸ்டர் விசாரணைகளுக்கு இடையூறுகள் -பேராயரின் ஊடகப் பேச்சாளர்

கைதுகளை விமர்சிப்பதால் ஈஸ்டர் விசாரணைகளுக்கு இடையூறுகள்
-பேராயரின் ஊடகப் பேச்சாளர்
 


பாதிக்கப்பட்டோர், தவறான விமர்சனங்களால் அதிருப்திநீதிமன்ற தீர்ப்பு வரும் வரைக்கும் ஒத்துழையுங்கள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சுயாதீனமாகவும் தடையின்றியும் முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டு மென,பேராயரின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.விசாரணைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தவறான விமர்சனங்களை முன்னெடுப்பவர்களின் பின்னணியில் காணப்படும் நிகழ்ச்சி நிரல் என்னவென்பது தெளிவாவதாகக் குறிப்பிட்ட அவர், இது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணை என்பதால் அதனை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட் டமை தொடர்பில் பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களில் சமூகத்தில் தவறான சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை பரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே,அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அருட்தந்தை;

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதை,அவர் ஒரு பாதுகாப்புப் பிரிவு அதிகாரி மற்றும் ஒரு படை வீரர் என அடையாளப்படுத்தி சட்டத்திலிருந்து அவர்,விலக்கிப் பார்க்கப்பட வேண்டியவர் என சிலர் கருத்துக்கள் முன்வைத்து வருகின்றனர். அவ்வாறான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் முற்றிலும் தவறானவை.சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். அது அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேற்பட்டவர் அல்ல என்பதை அடிப்படையாகும். சட்டம் உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் அதனை தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்கு தடை ஏற்படுத்துவது எந்த விதத்திலும் பொருத்தமானதல்ல.

கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே ஈஸ்டர் ஞயிறு குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேக நபர் என்ற வகையில் மட்டுமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

அதனை விடுத்து இத்தருணத்தில் குழப்பமடைந்து இறுதித் தீர்மானத்துக்கு வருவதும் சமூக ஊடகங்கள் மூலம் தவறான விமர்சனங்களை முன்னெடுப்பதும் எந்த விதத்திலும் பொருத்தமானதல்ல.தவறான விமர்சனங்களை முன்னெடுப்பவர்களைப் பார்க்கும் போது அவர்களின் பின்னணியில் காணப்படும் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது தெரிகின்றது.

இது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணை. அதனை சுதந்திரமாக அவர்கள் முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும்.இதனை அரசியலாக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதனை விடுத்து இந்த விசாரணைகளை சீர்குலைப்பதற்கு முயற்சிப்போர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்து, அங்கவீனர்களாகியுள்ள மக்களுக்கு இழைக்கும் அநீதி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

குண்டுத்தாக்குதல் மூலம் இழைக்கப்பட்ட அநீதி சாதாரணமானதல்ல.300 உயிர்கள் இதில், பலியாகியுள்ளன. முழு நாடும் துயரத்தில் ஆழ்ந்த கூட்டுப் படுகொலை அது. இதில் பெரும்பாலானவர்கள் ஈஸ்டர் ஞாயிறு திருப்பலி பூசைக்காக ஆலயத்திற்குச் சென்றவர்கள். அதனால் இதன் பின்னணியில் உள்ள உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். மேற்படி சம்பவத்தின் பின்னணியில் இருந்த திட்டம் என்ன? இந்த திட்டத்துடன் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என்ற பயத்துடன் சிலர் உள்ளதையும் காண முடிகிறது. அதன் பிரதிபலன் தம்மால் பொறுத்துக் கொள்ள முடியாத சுமையாக அமையும் என சிலர் சிந்திக்கின்றனர். எனினும் வீணான சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை சில அமைப்புகள் அல்லது குழுக்கள் தமது தனிப்பட்ட தேவைக்காகவோ அல்லது தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காகவோ உபயோகப்படுத்தினார்களா என்பது தொடர்பில் சமூகத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு இடமளித்த மற்றொரு தரப்பினர் உள்ளமை தொடர்பிலும் சிலரால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.அதனால் ஆரம்பத்திலிருந்து இந்த விசாரணையை மிகவும் சுயாதீனமாக முன்னெடுப்பது முக்கியமாகும். அப்பாவி மக்களைப் படுகொலை செய்து தமது தேவைகள் அல்லது அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு செயற்பட்ட தரப்பினர் இன்னும் சமூகத்தில் சுதந்திரமாகவே உலாவுகின்றனர். இது நாட்டின் பாதுகாப்புக்குப் பாரிய சிக்கலாக அமையும்.நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மக்களுக்கு நீதி, சுயாதீனம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் அவ்வாறான தரப்பினரை சட்டத்தின் முன் கொண்டு வருவது அவசியமாகும்.இந்த தருணத்தில் நாம் ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்வது இந்த விடயங்களை அரசியல் கோணத்தில் அறிக்கையிட வேண்டாம் என்பதே.

No comments: