நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழு மீளமைப்பும் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபரின் வழிகாட்டலில், பிரதி அதிபர் எம்.எச். லாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் 06 முதல் தரம் 11 வரை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாடசாலையின் ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைப் பொறுப்பாசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி சம்சுதீன் அவர்கள் நிகழ்வை முழுமையாக நெறிப்படுத்தினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய பிரதி அதிபர், தற்போதைய சவால்கள் நிறைந்த சமூக சூழலில் மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் பேணுவதில் சிறுவர் பாதுகாப்பு குழுவின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாணவர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ. குகராஜ் அவர்கள் கலந்துகொண்டு, சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு முறைகள், தற்காப்பு நெறிமுறைகள் மற்றும் சுய பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழுவின் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளில் முன்னணி வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: