
ஒரு நாட்டின் சட்டங்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் வாழ்வை அச்சுறுத்துவதாக இருக்கக்கூடாது. இருப்பினும், பாகிஸ்தானில் உள்ள மத நிந்தனைச் சட்டங்கள் (Blasphemy Laws), தனிநபர்களின் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை மற்றும் வாழ்வுரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பாகிஸ்தானில் நிலவும் மத நிந்தனைச் சட்டங்கள், குறிப்பாக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-C, சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒரு சட்டமாகும். பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள், காலப்போக்கில் கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகி, இன்று பாகிஸ்தானிய சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான ஒரு ஒன்றாக மாறியுள்ளன.
ஆரம்பத்தில் பொதுவான மத உணர்வுகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், 1980களில் ஜெனரல் ஸியா-உல்-ஹக்கின் ஆட்சிக்காலத்தில் தீவிரமடைந்தன.குற்றவியல் சட்ட கட்டளைகளின் கீழ், மத நிந்தனை குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு, மரண தண்டனை கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக, நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்படும் செயல்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சட்டம், அகமதியா சமூகத்தினர் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்வதையும் தடை செய்தது.
வரலாற்றுப் பின்னணி மற்றும் சட்டக் கட்டமைப்பு
பாகிஸ்தானின் தற்போதைய மத நிந்தனைச் சட்டங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டத்திலிருந்து உருவானவை என்றாலும், 1980-களில் சியா-உல்-ஹக் ஆட்சியின்போது கடுமையாக்கப்பட்டன.
பாகிஸ்தானின் 295-C என்ற குற்றவியல் சட்டப் பிரிவு மிகவும் சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவாக மனித உரிமை அமைப்புகளால் பார்க்கப்படுகிறது. நபிகள் நாயகத்தைப் பழித்துரைக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு செயலுக்கும் மரண தண்டனையை இந்த சட்டம் வழங்குகிறது.
இந்த சட்டத்தில் “நிந்தனை” என்பதற்குத் தெளிவான சட்ட வரையறை இல்லாததால், பாகிஸ்தானிய சமூகத்தில் தனிப்பட்ட கருத்து முரண்பாடுகள் மற்றும் பகைமைகள் கூட இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தள்ளன.
மத நிந்தனைச் சட்டங்களின் கீழ் பதிவாகும் வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சமூக நீதிக்கான மையம் (CSJ) மற்றும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (HRCP) ஆகியவற்றின் சமீபத்திய தரவுகள் இந்த பிரச்சினையின் ஆழத்தை எடுத்துக் காட்டுகின்றன.
2023-2024 காலப்பகுதியில் மத நிந்தனைச் குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் முன்வைக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பதியப்படும் வழக்குகளில் 70% க்கும் அதிகமானவை, தனிப்பட்ட பகை, நிலத் தகராறுகள் அல்லது மத வெறுப்பைத் தூண்டும் நோக்கில் பொய்யாகச் சோடிக்கப்பட்டவை என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், இந்துக்கள், அகமதியாக்கள் மக்கள் தொகையில் மிகக் குறைந்த சதவீதத்தினராக இருப்பதால், மத நிந்தனை வழக்குகளில் இவர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர்.
பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின் (HRCP) படி, 1987 முதல் 2021 வரை குறைந்தது 1,855 பேர் மத நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.
இதில் 200க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள், 633 பேர் முஸ்லிம்கள், 765 பேர் அகமதியா அமைப்பை சார்ந்தவா்கள் மற்றும் 31 பேர் இந்துக்கள் என அறிய வருகிறது.
சமூக நீதிக்கான மத்திய நிலையத்தின் (CSJ) அறிக்கையின்படி, 1987 முதல் 2020 வரை பாகிஸ்தானில் மதநிந்தனை சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில், 75% க்கும் மேற்பட்டவை தனிப்பட்ட பகைமை அல்லது சொத்து தகராறுகளால் காரணமாக பொய்யாக சோடிக்கப்பட்ட வழக்குகள் என்று கண்டறியப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்காமல், மதவெறி கொண்ட கும்பல்களால் பலர் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்படுகின்றனர். முன்னாள் பஞ்சாப் ஆளுநரான சல்மான் தசீர் மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஷாபாஸ் பட்டி ஆகியோர் மத நிந்தனைச் சட்டத்தை சீர்திருத்த வேண்டும் என வலியுறுத்தியதற்காகக் படுகொலை செய்யப்பட்டனர்.
இத்தகைய படுகொலைகள், இந்த சட்டத்தை எதிர்த்துப் பேசுவதற்கே அச்சப்படுகின்ற சூழலை உருவாக்கியுள்ளன. சமீபகாலமாக, மத நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கும்போதே சக கைதிகளால் அல்லது காவலர்களால் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
ஒருவர் மீது மத நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே, அந்த நபர் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பத்தாரும் சமூகத்தால் புறக்கணிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்.
பல கிறிஸ்தவ மற்றும் இந்து மாணவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகப் படிப்பை பாதியிலேயே நிறுத்துவதாகவும், சிறுபான்மையினர் தங்களின் வேலைகளை இழந்து, வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இந்த அச்சத்தின் காரணமாக, பல சிறுபான்மையினர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி நாடற்றவர்களாக அகதி முகாம்களில் தஞ்சமடைகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ (Generalised Scheme of Preferences Plus) வரிச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்ள, பாகிஸ்தான் சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த வரிச்சலுகையை பெறுவதற்கு மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகியவை முக்கிய நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளது..
பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டத்தின் தவறான பயன்பாடு காரணமாக, அந்நாடு மீது GSP+ அந்தஸ்தை திரும்பப் பெற வேண்டும் என ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தொடர் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.
வரிச் சலுகை நீட்டிக்கப்பட்டாலும், மத நிந்தனைச் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் எதிர்காலத்தில் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டம், தனிநபர்களின் பேச்சுரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இது நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளை சிதைத்து, சமூகத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது.
ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தச் சட்டங்களில் முறையான திருத்தங்களைக் கொண்டுவருவதும், பொய்யான புகார்களை அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்
No comments: