News Just In

1/28/2026 04:42:00 AM

‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்!

‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்




 நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கை, மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ஜனநாயகன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய தணிக்கை வாரியம் மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்தது. இதுதொடர்பான வழக்கு கடந்த ஜன.20-ம் தேதிஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை வாரியம் பதில் அளிக்க கால அவகாசம் அளிக்கவில்லை. எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இப்படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், ராணுவ சின்னங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளதால் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு மீண்டும் புதிதாக மனு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் கோரிக்கையில் மாற்றங்களை செய்து தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்கை தனி நீதிபதி மீண்டும் முழுமையாக விசாரித்து தகுதியின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும். அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் விளக்கமளிக்க தனி நீதிபதி போதுமான அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதனால் ஜனநாயகன் படம் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது

No comments: