News Just In

12/26/2025 08:54:00 AM

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டி பேரணி - நினைவேந்தலும் அனுஸ்டிப்பு

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டி பேரணி - நினைவேந்தலும் அனுஸ்டிப்பு



மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட கட்சியின் உள்ளுராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பான விசாரணைகளை மீளவலியுறுத்தும், நீதிகோரும் முகமாகவும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாநகரசபை வரையில் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மாமனிதர் ஜோசப் எம்.பியின் படுகொலைக்கு நீதிவேண்டும், அனுர அரசே நீங்களும் உடந்தையா, சர்வதேசமே 20 வருடங்கள் கடந்தும் நீதியில்லை, கொலையாளியை கண்டுபிடிக்க 20 வருடமா? போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மாநகரசபை மண்டபம் வரையில் ஊர்வலம் சென்றது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்றைய நிகழ்வில் விசேடமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், இலங்கை வரலாற்றுப் பின்னணியில் சமஸ்டித் தீர்வினைப் பெறல் என்ற தலைப்பில் சமஸ்டித் தீர்வு தொடர்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் முனைப்புகள் தொடர்பில் நினைவுப்பேருரை நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது நினைவுரையாற்றிய பேராசிரியர் சர்வேஸ்வரன் தமிழரசுக்கட்சியினரால் கௌரவிக்கப்பட்டார்

No comments: