News Just In

12/26/2025 05:55:00 PM

தசாப்தம் கடந்த துயரத்திற்கு தீர்வு – வாக்குறுதியை நிறைவேற்றிய கல்முனை மாநகர ஆணையாளருக்கு நன்றி !

தசாப்தம் கடந்த துயரத்திற்கு தீர்வு – வாக்குறுதியை நிறைவேற்றிய கல்முனை மாநகர ஆணையாளருக்கு நன்றி !


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது கரையோர பிரதேச மக்கள் தசாப்தங்களாக எதிர்நோக்கியிருந்த ஒரு முக்கியமான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த வாரம் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி அவர்களை எங்கள் அமைப்பின் தவிசாளர் அவர்கள் சந்தித்த போது, மாணவர்களினதும் பொதுமக்களினதும் நலன் கருதி சாய்ந்தமருது ஸாலிஹா அரிசி ஆலை வீதி தொடக்கத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்கும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளும் அவரிடம் முன்வைக்கப்பட்டன.

அந்த சந்திப்பின் போது, இவ்வாரம் இறுதிக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்திருந்த நிலையில், அவர் வழங்கிய வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், சாய்ந்தமருது ஸாலிஹா அரிசி ஆலை வீதி, மாளிகா வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால்கள் பல தசாப்தங்களாக அடைபட்ட நிலையில் இருந்து, நீர் ஓட முடியாமல் தடுப்பட்டிருந்தன. இந்நிலையை மாற்றி, வடிகால்களை சுத்தம் செய்து நீர் சீராக ஓடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று, சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள கடற்கரை வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருந்த சுகாதார அச்சுறுத்தல்களை நீக்குவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக செயலிழந்திருந்த வீதி விளக்குகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடற்கரை வீதி மற்றும் ஸாலிஹா அரிசி ஆலை வீதியில் உள்ள பல விளக்குகள் மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறான மக்கள் நல நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்த கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி, கல்முனை மாநகர சபையில் L.G.A ஆக கடமையாற்றும் எம்.சர்ஜுன், சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே. காலீதின், மற்றும் சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் அல்-மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா இதன் மூலம் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளது.

No comments: