
தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடாத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையினர், மத்திய அரசு ஊடாக இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவ இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத்தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.
அங்கு நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒருமணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பின்போது 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பை நிராகரித்து தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்கல், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் என்பன தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இச்சந்திப்பில் பேசப்பட்ட மற்றும் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றையும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கையளித்தனர். அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குறித்த முயற்சியானது ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்குவதாக அமையவேண்டும் என்ற நோக்கிலேயே எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களினதும், அதன் முதலமைச்சரான தங்களதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் இந்தச் சந்திப்பைக் கோரியிருந்தோம்.
நீங்கள் ஈழப்போராட்ட வரலாற்றை நன்கு அறிந்தவர். 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டின் பிரதிபலனாக இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுது. அவ்வொப்பந்தத்தில் தமிழ் மக்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, குறித்த வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒரு அலகாகக்கொண்டு சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பது கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்குச் செயல்வடிவம் வழங்குதல் எனும் பெயரில் இலங்கை அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தமும், அதனூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையும் ஓர் ஒற்றையாட்சி வரையறைக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட முறைமையாகவே காணப்படுகின்றது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் தாற்பரியத்தையும், ஈழத்தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டையும் மிகத் தந்திரமாக நிராகரிக்கும் நோக்கிலேயே அரசாங்கத்தினால் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக இந்த மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.
13 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இலங்கையின் இறுக்கமான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் மாகாணசபைகளுக்கு எந்தவொரு அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படமுடியாது என்றும், அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்றும் இலங்கையின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை இறுதிப்படுத்தி நிறைவேற்றப்போவதாகத் தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வரைவானது ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை விடவும் மிகப் பலவீனமானதாகும்.
இந்நிலையில் தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தலைவரான நீங்களும் மத்திய அரசு ஊடாக இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக புதிய அரசியலமைப்பில் தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
இப்போது பொருளாதார ரீதியில் வீழ்ச்சிகண்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியமாகும். அதுமாத்திரமன்றி தமிழகத்தோடு பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவையும், தொடர்பாடலையும் கட்டியெழுப்பாமல் பொருளாதார வளர்ச்சியை அடைவதென்பது இலங்கைக்கு சவாலானதாகவே இருக்கும். ஆகவே இலங்கைமீது கணிசமான அழுத்தத்தைப் பிரயோகித்து, தமிழர்கள் விரும்பும் மேற்படி தீர்வை இந்தியாவினால் சாத்தியமாக்கமுடியும் என நம்புகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: