
காலியில் அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை நகர சபையின் உறுப்பினர் இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், “அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று காலை 10.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சென்ற இனந்தெரியாத சிலர் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை நகர சபையின் உறுப்பினர் என போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை நகர சபையின் உறுப்பினர் இல்லை. அவர் ஒரு வர்த்தகர் ஆவார். பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "கரந்தெனிய சுத்தா"வின் மூத்த சகோதரியின் கணவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நான்கு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.” என்றார்.
No comments: