News Just In

11/30/2025 06:37:00 PM

இலங்கையில் பெரும்துயரம் : ஒரே இடத்தில் புதையுண்ட 23 தமிழர்கள்

இலங்கையில் பெரும்துயரம் : ஒரே இடத்தில் புதையுண்ட 23 தமிழர்கள்




கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இந்த மண்சரிவு சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இரவு ஏற்பட்டது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
மண்சரிவுக்கு உள்ளாகிய வீடு

கடந்த வியாழ்ன் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர்.

தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே உயிரிழந்த துயர சம்பவமும் பதிவாகியுள்ளது.

பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் மறுநாள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.



இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன. ஏனையோரை தேடும் பணிகளுக்காக இராணுவத்தினர்வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

No comments: