News Just In

11/30/2025 06:21:00 PM

சாய்ந்தமருது வெள்ளப் பாதிப்புகளை அம்பாறை அரசாங்க அதிபர் பார்வையிட்டார் : மேலதிக நடவடிக்கைகளுக்கு பணிப்பு

சாய்ந்தமருது வெள்ளப் பாதிப்புகளை அம்பாறை அரசாங்க அதிபர் பார்வையிட்டார் : மேலதிக நடவடிக்கைகளுக்கு பணிப்பு



நூருல் ஹுதா உமர்

தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தில் உருவான வெள்ளப் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் மக்கள் அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்பாறை அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம நேரடியாக பார்வையிட்டு நிலைமையை மதிப்பீடு செய்ததன் தொடர்ச்சியாக இடைத்தங்கல் முகாமாக செயற்பட்ட இப்பாடசாலைக்கும் விஜயம் செய்து அனர்த்த ஆபத்து நிலைகளையும், மேலதிக விடயங்களையும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்கிடம் கேட்டறிந்து கொண்டார்.

நீர்மட்டம் உயர்ந்துள்ள பகுதிகளில் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தற்காலிக தங்குமிடங்கள், உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டிய அவசியம் குறித்து மக்களும் அரச அதிகாரிகளும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் ஒழுங்குபடுத்தப்படும் வகையில் அரசாங்க அதிபர் தேவையான பணிப்புகளை உடனடியாக வழங்கினார்.

குறிப்பாக, தற்காலிக தங்குமிடங்களின் முகாமைத்துவம், உணவு மற்றும் மருத்துவ உதவிகள், சுத்தமான குடிநீர் விநியோகம், குழாய்ச் சேதங்கள், சாலை மற்றும் வடிகால் சீரமைப்பு போன்றவை விரைவாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதின் பல பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளதால், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அனைத்து அரச மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் அரசு வழங்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும், ஆபத்தான இடங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாமாக செயற்பட்ட அல்- ஹிலால் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்ட மக்களின் நலனில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொலிஸார் உட்பட பொது சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர்

No comments: