ரணிலை விடுதலை செய்யுமாறு எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களின்படி அவை குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'இலங்கை அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன், ஆனால் அது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராகவும் இருந்த சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதியின் கைது குறித்து கவலை தெரிவித்த பல இலங்கை மற்றும் தெற்காசிய அரசியல்வாதிகளுடன் இணைந்துள்ளார்
No comments: