
கறுப்பு ஜூலை குறித்த ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுள்ள கனடிய தமிழர் பேரவை தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
கறுப்பு ஜூலை '83 நிகழ்ந்து இந்த ஆண்டுடன் 42 வருடங்கள்.
தமிழர்களை குறிவைத்து திட்டமிட்ட இன அழிப்பு இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் நேரடியாக இனப்படுகொலைகளாக கட்டவிழ்க்கப்பட்ட சோகம் நிகழ்ந்தது கறுப்பு ஜூலை தினங்களில் என்பதை வரலாறும் தமிழ் மக்களும் என்றும் மறந்துவிடப்போவதில்லை.

கனடியத் தமிழர் பேரவை 2008 ஆம் ஆண்டில் இருந்து கறுப்பு ஜூலை கொடூரங்களை கண்ணுற்று தப்பித்து வந்தவர்களைத் தேடி அவர்களிடம் இருந்து சாட்சியங்களை ஒலிஇ ஒளிப்பதிவுகளாக ஆவணப்படுத்தி வருகின்றது. இது நம் வரலாற்றை திரிபுபடுத்தாமல் கடத்த மிக முக்கியமான ஆவணப்படுத்தலாகும்.
கறுப்பு ஜூலையில் அழியாத நினைவுகளை ஆவணப்படுத்தும் முயற்சி இது. அனுபவித்து அழுது மனத்திற்குள் ரணங்களாக பூட்டி வைத்திருக்கும் அனுபவங்களை எம் இனத்தின் கடந்துவந்த வலிகளின் சாட்சியமாக மாற்றி நம் தலைமுறையினருக்கு கொடுத்து செல்ல வேண்டியது எம் பொறுப்பு.
இந்த செயற்பாட்டை தொடர உங்களின் பங்களிப்புக்களும் எங்களுக்கு மிக முக்கியமானது. நீங்கள் கறுப்பு ஜூலையில் நேரடியாக பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது உங்களிற்கு தெரிந்த யாரேனும் நேரடி சாட்சியங்களாக இருந்தால் எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.
உயிர் இழப்புகளையும்
உடல் வடுக்களையும்
உடமை அழிப்புக்களையும்
பாதிக்கப்பட்டவர்களின் குரலிலேயே ஆவணப்படுத்தி வைப்போம்.
காலங்கள் கடந்தாலும் மீண்டவர்கள் மறைந்தாலும் சாட்சியங்கள் என்றும் பதியப்பட்டிருக்க வேண்டும். எம் வரலாறுக்கும் இனமாக நாம் கண்ட வலிகளுக்கும் இவை என்றும் அழியாத ஆதாரங்களாக இருக்கும்
No comments: