பல்வேறு குற்றச் செயல்களுடன் இனிய பாரதிமற்றும் அவரது சகா கைது!

திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் நேற்று முன் தினம் (06), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இனியபாரதி என்று அழைக்கப்படும் கே. புஸ்பகுமார் (45) மற்றும் அவரது சகா சசீதரன் தவசீலன் (44) ஆகியோரை 2005-2008 காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கி பயன்பாடு, சித்திரவதை கூடங்கள் நடத்துதல், மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
இனியபாரதி, 2004இல் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மான் பிரிவின் திருக்கோவில் ஆயுதமேந்திய முகாமின் தலைவராகவும், 2007-2008இல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், 2012-2015 வரை கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
தவசீலன் அவரது சீடராக செயல்பட்டார். இருவரும் பிள்ளையான் தலைமையில் குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அவர்களின் உதவி மற்றும் உடந்தைகள் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,
2005.02.07: பொலன்னறுவை வெலிகந்த புல்லேயரடியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு உட்பட 6 பேர் படுகொலை.
2007.05.09: சிந்துஜன் என்ற ஜோன்சன் ஜெயகாந்தன் படுகொலை.
2007.06.28: திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தில்லைநாயகம் உதயகுமார் படுகொலை.
2007.07.27: திருக்கோவிலைச் சேர்ந்த சிவனடிகன் அழகுராசா கடத்தல்.
2008.04.20: கல்முனை பாண்டிருப்பு பகுதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் கந்தையா நாகராசா, கனகரத்தினம் ஆனந்தி படுகொலை.
2008.09.25: திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த திருமால் திருச்செல்வம் கடத்தப்பட்டு படுகொலை.
2008.11.21: விநாயகபுரத்தைச் சேர்ந்த இராசையா கோபுலன் மற்றும் அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், 2022.12.21 அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்தில் இவர்களின் ஈடுபாடு குறித்து விசாரணை நடைபெறுகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைய அறிக்கைகளில் இனியபாரதி, கொலைகள், கடத்தல்கள், சித்திரவதை கூடங்கள் நடத்துதல், மற்றும் துப்பாக்கி பயன்பாட்டில் ஈடுபட்டவராக பெயரிடப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
No comments: