நமது நிருபர்
பொத்துவில் நகரின் வடக்கே திருக்கோவில் பிரதேச பிரிவும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கேயும் மேற்கேயும் லாகுகல பிரதேச செயலகப் பிரிவும் அமைந்துள்ளது. முஸ்லீம்களை பெரும்பான்மையாக் கொண்ட இப்பிரதேச செயலகப் பிரிவில் 2007 கணக்கெடுப்பின் பிரகாரம் 33625 மக்கள் வாழ்வதாக அறியமுடிகிறது. இப்பிரதேசம் 63 கிராமங்களை தன்னகத்தே கொண்டதோடு இவற்றின் நிர்வாகம் 27 கிராம சேவகர் பிரிவுகளாக செயற்படுகிறது. பொத்துவில் 60ம் கட்டை எனப்படும் கனகர் கிராமம் B/25 என்ற கிராம சேவகர் பிரிவாக அமைந்துள்ளது. 1958ம் ஆண்டிற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக காணப்பட்ட பொத்துவில் பிரதேசம் 1958 இல் தோற்றுவிக்கப்பட்ட அம்பாரை மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டது.
பொத்துவில் 60ம் கட்டை எனப்படும் கனகர் கிராமம் தற்போது அமைந்துள்ள இடம் 1950 – 1960 காலப்பகுதியில் காடுகள் வெட்டப்பட்டு சேனைப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்ட பிரதேசமாகக் கருதப்படுகிறது. இப்பிரதேசம் அக்காலப்பகுதியில் சமுளை மரங்கள் நிறைந்த பிரதேசமாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் ஆழமாக உள்ளது.
1960 – 1990 வரையிலான காலப்பகுதியில் பிரதான வீதிக்கு இரு மருங்கிலும் சுமார் 278 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் ஒரு குடும்பத்திற்கு மூன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் வரையிலான காணிகள் இருந்ததாகவும் கனகர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
1981ம் ஆண்டு காலப்பகுதியில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி அமைச்சருமாக இருந்த M.C. கனகரெத்தினம் அவர்கள் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக வீடுகளை அமைக்கக்கூடிய வசதியுள்ள அரச உத்தியோகத்தர்கள் கொண்ட குடும்பங்களுக்கு கடனடிப்படையில் 30 வீடுகளை வழங்கி அதன்பின்னர் கனகர் கிராமம் என பெயர் சூட்டப்பட்டது. 1981ம் ஆண்டு அரச வர்த்தமானியில் 60 மைல் போஸ்ட் கிராமத்தை “கனகர்” கிராமம்” என அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. மேலும் இப்பிரதேசத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரு இனங்களையும் சேர்ந்த மக்கள் விவசாயத்தை மேற்கொண்டதாகவும் சில தகவல்கள் வெளிப்படுத்தப்படுகிறது.
1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக சிங்கள இராணுவத்தால் வீடுகள் மற்றும் மக்களின் உடமைகள் அழிக்கப்பட்டு உயிர்ச் சேதங்களும் ஏற்படுத்தப்பட்டது. 1990 இல் சிங்கள இராணுவத்தின் அட்டூளியத்தால் 20க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன் தனது உறவினர்கள் மாத்திரம் அதில் ஏழு என கனகர் கிரா குடியேற்ற மக்கள் அமைப்பின் தலைவி இரத்தினம்மா தனது துயரத்தை பகிர்ந்துகொண்டார். இதன் விளைவாக அப்பிரதேசத்தில் இருந்த 278 குடும்பங்களும் திருக்கோவில் மற்றும் அயல் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர். 2009ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் தமது சொந்த இடமான ஊறணி “கனகர் கிராமத்திற்கு” மக்கள் திரும்பிச்செல்ல முற்பட்ட நிலையில் இப்பிரதேசம் வனவிலங்கு இலாகாவுக்கு உட்பட்டு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை கண்டு மக்கள் பெரும் கவலை கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது கனகர் கிராம மக்களுக்கான மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்படவில்லை. இம்மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக தமது கோரிக்கைகளை பல தடவை முன்வைத்தபோதும் அது கவனிக்கப்படவில்லை. மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வதற்கு வனபரிபாலன திணைக்களம் மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை வழங்கியது. இதனால் 1990ம் ஆண்டுக்கு பின்னர் இப்பிரதேசம் எவ்வித பராமரிப்பும் இன்றி காடாகி காட்சியளித்தது.
2018 ஆவணி 13ம் திகதியன்று அகிம்சை வழியிலான நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட கனகர் கிராம குடியிருப்பு மக்களிடம் பிரதேச செயலாளர், வனபரிபால திணைக்கள அதிகாரிகள் மற்றும் விடமைப்பு அதிகாரசபையினர் வந்து உரையாடி மாவட்ட அரச அதிபர் மக்களை சந்திக்காத நிலையில் 30 வீடுகளை அமைத்து ஆளுக்கு 40 பேர்ச் (4 பரப்பு) காணி தருவதாக வாக்குறுதி வழங்கினர். 1990ம் ஆண்டில் 278 குடும்பங்களாக இருந்த இம்மக்களின் குடும்ப எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மடங்காக அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்து 40 பேர்ச் காணி விடயத்தை முற்றாக போராட்டகாரர்கள் நிராகரித்தனர்.
இரவு பகலாக போராட்டம் நீடித்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதற் கட்டமாக 73 பேருக்கு கனகர் கிராமத்தில் உட்பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான அனுமதிப் பத்திரம் 2023ம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ. செந்தில் தொண்டமான் அவர்களால்; வழங்கப்பட்டது. 73 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 1 ஏக்கர் 20 பேர்ச் காணி வழங்கப்பட்டது. பயிர்ச்செய்கைக்கு 1 ஏக்கரும் வீடு அமைக்க 20 பேர்ச்சும் அனுமதிக்கப்பட்டது. வீதியில் இரு மருங்கிலும் குடியிருந்த மக்களின் வீதிக்கு மேற்குப் புறமாக இருந்த காணி குடியிருப்புக்கு மறுக்கப்பட்டு வீதியின் கிழக்கு புறமாக கடற்கரை வரையிலான ஏறத்தாழ 10 Km சுற்றளவு உள்ள பிரதேசம் மக்கள் குடியேற முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டது.
இரவு பகலாக போராட்டம் நீடித்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதற் கட்டமாக 73 பேருக்கு கனகர் கிராமத்தில் உட்பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான அனுமதிப் பத்திரம் 2023ம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ. செந்தில் தொண்டமான் அவர்களால்; வழங்கப்பட்டது. 73 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 1 ஏக்கர் 20 பேர்ச் காணி வழங்கப்பட்டது. பயிர்ச்செய்கைக்கு 1 ஏக்கரும் வீடு அமைக்க 20 பேர்ச்சும் அனுமதிக்கப்பட்டது. வீதியில் இரு மருங்கிலும் குடியிருந்த மக்களின் வீதிக்கு மேற்குப் புறமாக இருந்த காணி குடியிருப்புக்கு மறுக்கப்பட்டு வீதியின் கிழக்கு புறமாக கடற்கரை வரையிலான ஏறத்தாழ 10 Km சுற்றளவு உள்ள பிரதேசம் மக்கள் குடியேற முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டது.
கனகர் கிராமத்தில் 50 பேர் குடியமர்த்தப்பட்டாலும் ஏறத்தாழ 25 பேர் வரையிலே தற்போது நிரந்தரமாக குடியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. இம்மக்கள் தொடர்ந்து குடியிருப்பதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குவதை பார்த்தும் கேட்டும் அறிய முடிந்தது.
அவையாவன:
i. சுற்றிவரக் காணப்படும் அடர்ந்த காடுகள் காரணமாக மக்கள் யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
ii. சுத்தமான குடிநீரை பெற பல கிலோமீற்றர் தூரம் பயணிக்கின்றனர்.
iii. கனகர் கிராமத்திலிருந்து
பொத்துவில் நகரம் - 10 Km
வைத்தியசாலை - 10 Km
பாடசாலை - 03 Km
பாலர் பாடசாலை - 03 Km
வர்த்தக நிலையங்கள் - 10 Km இல் காணப்படுகின்றது.
பல குடும்பங்கள் பகல் வேளையில் தமது கொட்டில்களில் தங்கியிருந்து பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் தமது தற்போதைய தற்காலிக இருப்பிடங்களுக்கு செல்வதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. நிரந்தரமாக குடியிருக்கும் பலர் தமது எல்லைக்குள் குழிகளை வெட்டி நீரைப்பெற்று மேட்டு நிலப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதை காண முடிந்தது. நீர் இறைக்கும் பம்பிகள், நீர்க்குழாய்கள் என்பவற்றை சிலர் பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் யானையின் அச்சுறுத்தலைத் தடுக்க சூரிய மின்கலம் மூலம் யானை தடுப்பு வேலிகளையும் அமைத்துள்ளனர். இப்பகுதியில் குடியமர அனுமதிக்கப்பட்ட 85 பேரில் பலர் நம்பிக்கையற்றும் விரக்தியுற்றும் காணப்படுகின்றனர். இவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் கடமைப்பாடு எமது சமூகத்துக்கே உரியதாகும்.
No comments: