News Just In

4/17/2025 01:15:00 PM

முஸ்லிம்களின் விடயத்தில் அப்பட்டமான இனவாதிகள் தேசிய மக்கள் சக்தியினரே - ராஜபக்ஸகள் அல்லர்

முஸ்லிம்களின் விடயத்தில் அப்பட்டமான இனவாதிகள் தேசிய மக்கள் சக்தியினரே - ராஜபக்ஸகள் அல்லர் என்கிறார் சம்மாந்துறை அஸ்பர்


நூருல் ஹுதா உமர்

முஸ்லிம்களின் விடயத்தில் அப்பட்டமான இனவாதிகள் தேசிய மக்கள் சக்தியினரே ஆவர் என்று சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் இப்பிரதேச சபைக்கு சுயேச்சை குழு - 03 வானொலி பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான யு. எல். அஸ்பர் தெரிவித்தார்.

இச்சுயேச்சை குழுவின் அலுவலகம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை ஊடகவியலாளர்கள் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. சுயேச்சை குழு தலைவர் தொழிலதிபர் எஸ். எல். ஏ. நஸார் உள்ளிட்ட சக வேட்பாளர்கள், சமூக, பொதுநல, அரசியல் செயற்பாட்டாளர் அஹமட் புர்ஹான் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

பழைய மொந்தையில் புதிய கள் என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றி கொண்டு மக்கள் முன்னிலையில் வந்தனரே ஒழிய அவர்கள் அதே ஜே. வி. பியினர்தான், அவர்களுடைய கொள்கையில் எந்தவொரு அடிப்படை மாற்றமும் கிடையாது, அவ்வாறேதான் இயங்கி கொண்டிருக்கின்றனர் என்று புர்ஹான் பேசினார்.

நஸார் பேசியபோது சம்மாந்துறை பிரதேச சபையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக வானொலி பெட்டி விளங்கும், கடந்த 30 வருட காலத்துக்கும் மேலாக எமது மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களும், மாற்றம் என்கிற போர்வையில் ஆட்சியை பிடித்து மக்களை ஏமாற்றத்துக்குள் தள்ளியிருக்கும் திசைகாட்டியினருக்கும் எமது மக்கள் வாக்களிக்கவே மாட்டார்கள் என்றார்.

அஸ்பர் பேசியபோது தெரிவித்தவை வருமாறு

ராஜபக்ஸக்கள் தவறுகள் செய்துள்ளனர்தான், ஆனால் மஹிந்த, கோத்தாபய ஆகியோரின் அமைச்சரவையில் பல முஸ்லிம்கள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர், ஆனால் திசைகாட்டி அரசாங்கத்தால் ஒரு முஸ்லிமுக்குகூட அமைச்சு பதவி வழங்கப்படவில்லை.

நான் ராஜபக்ஸக்களின் ஆட்சி காலத்தில் பல டசின் கோடி ரூபாய் வேலை திட்டங்களை சம்மாந்துறை மண்ணுக்கு செய்து கொடுத்திருக்கின்றேன். ஆகவே யார் இனவாதிகள்? என்பதை மக்கள் உய்த்துணர வேண்டும். யார் மக்கள் சேவையாளர்? என்பதையும் புரிந்து நடக்க வேண்டும்.


மக்கள் கடந்த தேர்தல்களில் வீண் மாயைகளுக்கு சிக்கி வாக்களித்திருக்கின்றனர். இதனால் எமது மண்ணுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறி போனதொடர்கதைதான் நடந்து கொண்டிருக்கிறது. 20, 000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை கடந்த பொது தேர்தலில் சம்பந்தமே இல்லாத நபருக்கு வழங்கி இருக்கின்றனர்

No comments: