பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடை அல்லது நிதியுதவி பெற வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கும் குறைவானதாக காணப்பட வேண்டும் என்ற நிபந்தனை காணப்படுகின்ற நிலையில் பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கோடிக்கணக்கில் நிதியளிக்க முடியும்.
முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும் என இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தெரிவித்தார்.
2005 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 10 இலட்சம் முதல் கோடி கணக்கில் நிதி பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் வெளியிட்டார். இவ்விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (20) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வறுமை நிலையில் உள்ள மக்களின் நலன்புரி தேவைகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டுக்காகவே ஜனாதிபதி நிதியம் 1978 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஜனாதிபதி நிதியச் சட்டத்தில் நன்கொடை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டிய தரப்பினர் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், கல்வி மற்றும் புலமை தேர்ச்சி, மத மேம்பாடு, தேசியத்துக்காக சேவையாற்றியவர்களுக்கான நன்கொடை மற்றும் ஜனாதிபதி அல்லது நிதிய சபையின் தீர்மானத்துக்கு அமைய என்ற அடிப்படையில் நன்கொடை வழங்கப்பட வேண்டும்.
சாதாரண மக்கள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடையை பெற்றுக்கொள்வது இலகுவானதொன்றல்ல, நிதியத்தில் இருந்து நிதி பெறுவதற்கு எதிர்பார்க்கும் நபரின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கு குறைவானதாக காணப்பட வேண்டும், சிகிச்சைக்கு நிதி பெறுவதாயின் சிகிச்சையின் 50 சதவீதத்தை பிறிதொரு தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நிபந்தனைகள் விதிக்கப்படும். கடந்த காலங்களில் தகுதி உள்ளவர்களில் பலருக்கு நிதியத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை.
2005 முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகாலம் அமைச்சு, இராஜாங்க அமைச்சு உட்பட அரசாங்கத்தின் உயர் பதவி வகித்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதிய சபையின் தலைவர்களாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமக்கு இணக்கமானவர்களுக்கு மாத்திரம் நிதி வழங்கியுள்ளார்கள்.
பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும்.
முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும்.கடந்த கால ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்புக்காக இவ்வாறு முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள் . நாட்டு மக்களும் இவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார்
No comments: