News Just In

12/01/2024 02:12:00 PM

சீரற்ற காலநிலைப் பாதிப்புக்கள் பற்றி ஆராயும் கிழக்கு மாகாண ஆளுநரின் மாவட்ட விஜயம்!


சீரற்ற காலநிலைப் பாதிப்புக்கள் பற்றி ஆராயும் கிழக்கு மாகாண ஆளுநரின் மாவட்ட விஜயம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சமீபத்திய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆராயும் வண்ணம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து மாவட்ட நிருவாகத்துடனும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.
மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகாவின் பங்குபற்றலுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், இ. சிறிநாத், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பிரசன்னமாகியிருக்க ஆளுநர், வெள்ளப்பாதிப்புகிளிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான கலந்தாலோசனைகளில் ஈடுபட்டார்.
மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பினாலும் கூட, அநேகமான பாலங்கள், பாதைகள் போன்றன சேதமடைந்துள்ளன. இதனை புனரமைப்பு செய்வதற்குரிய ஆயத்தங்கள் மிக விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டனர்.
அதனூடாக பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இடராயத்த முகாமைத்துவக் குழுவினரால் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டபோதும்; அத்தொகையினை முறையான விதத்தில் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைவாக மாவட்ட மட்டத்தில் அனைத்து திணைக்கள அதிகாரிகளையும் இணைத்து கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காத்தான்குடிப் பிரதேசத்தில் மழையால் நிறைந்த வெள்ள நீரை விடவும் அதிகமாக வாவி நீர் ஊருக்குள் புகுந்ததனால், அதனை அண்டிய பகுதிகளில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகளாக சமைத்த உணவுகளை பிரதேச செயலகம், பள்ளிவாயல்கள், சமூக அமைப்புக்கள் ஊடாக வழங்கியமை பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வினால்; ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டது.

No comments: