News Just In

11/06/2024 10:37:00 AM

கல்முனை தொகுதியில் சிலிண்டருக்கு ஆதரவு கூடுகிறது - வேட்பாளர் ஏ.எம். ஜெமீல்

கல்முனை தொகுதியில் சிலிண்டருக்கு ஆதரவு கூடுகிறது - வேட்பாளர் ஏ.எம். ஜெமீல்



மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை தொகுதியை சிலிண்டர் வெற்றி கொள்ள தேவையான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னம் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கை பெற்ற கட்சியாக மாறி வருகிறது. கல்முனை தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க மூத்த அரசியல்வாதியாக இருந்த எச்.எம்.எம். ஹரீஷுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், செயலாளரும், துரோகிகள் சிலரும் செய்த அநியாயத்திற்கு நாங்கள் பதில் கொடுக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட சிலிண்டர் சின்ன மூன்றாம் இலக்க வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

அவருடைய தேர்தல் செயற்பாட்டு கல்முனைக்கான காரியாலயம் நஜாத் பௌண்டஷன் தலைவர் ஏ.எம். நஜாத் அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு கல்முனை 12 இல் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் முஸ்லிம் சமூகத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், கல்முனை தொகுதிக்கும் நான் மாகாண சபை உறுப்பினராக, அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவராக இருந்து செய்த நிறைய சேவைகள் பற்றி மக்கள் இப்போது மாவட்டம் முழுவதிலும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகிறார்கள். நான் கல்முனை தொகுதிக்கு நடந்துள்ள அநீதிக்கு விடை தேடிக் கொடுக்கவே இறுதிநேரத்தில் வேட்பாளர் நியமனத்தில் ஒப்பமிட்டேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், அவரது கூஜாக்களுக்கும் நாம் பாடம் நடத்த வேண்டிய நேரம் கனிந்துள்ளது. சகோதரர் ஹரீஸ் இல்லாத வெற்றிடத்தை அவரது நண்பரான என்னைக் கொண்டு நிரப்ப கல்முனை சகோதரர்கள் தமது ஆதரவை அணி திரண்டு இன்று எனக்கு வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் எனது கரத்தினை பலப்படுத்தி நமது வெற்றிக்காக முழுமையாக களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்ய கல்முனை மக்கள் முன்வந்துள்ளார்கள் என்றார்

இந்த தேர்தல் செயற்பாட்டு காரியாலய திறப்பு விழாவில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சப்ராஸ் மன்சூர், ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் நூருல் ஹுதா உமர், சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ. கரீம், சிரேஷ்ட அறிவிப்பாளர் ரோஷன் அஸ்ரப், இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எப்.எம். தில்ஷாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முன்னிலை செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: