தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்று நாங்கள் அனைவரும் முடிவெடுத்து இருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
"2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் இருந்து பல கட்சிகளைச் சார்ந்த சிங்கள வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தினை செலுத்தி உள்ளனர்.
வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது பற்றி கடந்த ஆறு மாதங்களாக பேசப்பட்டு வருகின்றது.
அது தொடர்பில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட தரப்புகளுடன், பல்வேறுபட்ட தனி நபர்களுடன் நாங்கள் பேசியிருக்கின்றோம். அந்த வகையில் நமது வேட்பாளர் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி இரண்டு மூன்று பெயர்களை நாங்கள் கூறியிருக்கின்றோம்.
அதில் ஒருவரை கட்டாயமாக பொது வேட்பாளராக நிறுத்துவோம். இன்றய தினம் பொது வேட்பாளர் யார் என மக்களுக்கு தெரியப்படுத்துவோம். கிழக்கு மாகாணத்தில் இருந்து திரு அரியநேந்தனும் வடக்கு மாகாணத்தை மையமாக வைத்து தவராசாவும் என இரண்டு பேர் இன்று இருக்கின்றார்கள்.
எல்லோருக்கும் இணங்க சரியான ஒருவர் தெரிவு செய்யப்படுவார். தமிழரசு கட்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்.
ஆனால், தமிழரசு கட்சியில் இருக்கக்கூடிய மிகப் பெரிய பெரும்பான்மையான உறுப்பினர்கள் இவர்களது நியமனங்களை ஏற்றுக்கொள்வதாக தான் நான் அறிகின்றேன்.
ஆகவே, அந்தவகையில் அவர்களைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சி அதற்கு எதிராக முடிவுகளை எடுக்காது என எதிர்பார்க்கிறார்கள். எனவே, அந்த வகையில் எடுத்தால் கூட எதிர்கொள்ள கூடிய வகையில் தான் அவர்கள் இருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்
No comments: