News Just In

8/22/2024 08:36:00 AM

அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான புத்தாக்க சமூக தீர்வுகள் தொடர்பான செயலமர்வு!

அம்பாரை மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் சமூக செயற்திட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கான புத்தாக்க சமூகத் தீர்வுகள் எனும் தலைப்பில் ஒருநாள் செயலமர்வு மாளிகைக்காடு ரோயல் பாவா மண்டபத்தில் (20) நடைபெற்றது.

டயகோனியா நிறுவனத்தின் அணுசரனையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டு முன்னணி இளைஞர் புத்தாக்க செயற்பாட்டு வலையமைப்புடன் இணைந்து நடாத்திய இச்செயலமர்வில் 33 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம். அஸ்லம் சஐ பிரதான வளவாளராக கலந்து கொண்டு சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எவ்வாறு புத்தாக்க ரீதியாக உருவாக்குவது தொடர்பான விரிவுரையினையும் குழு செயற்பாடுகளையும் நெறிப்படுத்தினார்.

இப்பயிற்சி நெறிக்கு சமூக மற்றும் அரச சார்பற்ற திட்டச் செயற்பாடுகளில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த சமூக அபிவிருத்தி செயற்பாட்டாளர்களான முஹம்மட் சமீர் மற்றும் சுதர்ஸன் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டு இளைஞர்கள் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் ஏனைய பங்களிப்பாளர்களையும் இணைத்து செயற்படும் வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்வின் இறுதியில் ஐந்து இளைஞர்கள் குழுக்களாக தமது புத்தாக்க சிந்தனைகளுடனான சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் செயற்பாடுகளையும் பிரேரித்தனர்.

விழுமியக் கல்வியினூடாக இளைஞர்களில் ஆளுமையினை விருத்தி செய்யும் திட்டங்களை தொடர்ச்சியாக டயகோனியா நிறுவனத்தின் உதவியுடன் செயற்படுத்தி வரும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு முன்னணியின் இவ்வாறான முயற்சிகளுக்கு இளைஞர் யுவதிகள் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அஸ்ஹர் இப்றாஹிம்)






No comments: