News Just In

8/08/2024 02:11:00 PM

ஊடகவியலாளர்கள் 5000.00 ரூபாவுக்கு சோரம் போனவர்களா? லக்‌ஷ்மன் கிரியெல்லவின் கருத்து அடிப்படையற்றது - சிரேஷ்ட ஊடகவியலாளர் றிஷாட் ஏ.காதர்.



(எஸ்.அஷ்ரப்கான்)

ஊடகவியலாளர்கள் 5000.00ரூபாவுக்கு சோரம் போனவர்கள் என நாடாளுமன்றில் கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்லவின் கருத்து அடிப்படையற்றது, கீழ்த்தரமானது என ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு வழங்கிய ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில்,
கடந்த 2024.08.05ஆந் திகதி பிராந்திய ஊடகவியலாளர்களை தலைநகரில் ஜனாதிபதி சந்தித்திருந்தார்.

இலங்கையின் வரலாற்று நெடுகிலும் பத்திரிகை நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களை அழைத்து கலந்துரையாடிய நிகழ்வுகளே நிரம்பி வழிந்தது. ஆனால் பிராந்திய ஊடகவியலாளர்களின் கோரிக்கையினை அரச தலைவர்களோ, பொறுப்பான அமைச்சர்களோ அல்லது அரசியல்வாதிகளோ கண்டுகொள்வதில்லை. இப்படியான தருணத்தில் பிராந்திய ஊடகவியலாளர்களின் குரல்களில் உள்ள சத்தங்களை வெளிக்கொணர சந்தர்ப்பம் கிடைத்தமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

பிராந்திய ஊடகவியலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படலாம் அல்லது நிறைவேறாமல் போகலாம். ஆனால் பிரச்சினைகளை சொல்வதற்கான களம் மிக முக்கியமானது. அதுவே இங்கு நடந்துள்ளது. இதனை மலினப்படுத்தி தேசத்தின் காவலர்களாக இருக்கின்ற ஊடகவியலாளர்களை நாட்டின் உயரிய சபையில் தரக்குறைவாக பேசிய விடயம் கண்டிக்கப்படவேண்டியது மட்டுமல்ல அந்தக் கருத்தை அவர் அதே சபையில் மீளப்பெறவும் வேண்டிய விடயம் ஆகும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் என்பதற்கு அப்பால் இந்த தேசத்தில் இப்போதும் ஜனாதிபதி. எல்லாத் தரப்பினருடைய குரல்களுக்கும் செவிசாய்க்கும் தார்மீகக் கடமை அவருக்கு உண்டு. அந்த அடிப்படையிலே நாட்டினுடைய ஜனாதிபதி பிராந்திய ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்லவின் கட்சித் தலைவர் தனது பதவிக் காலத்தில் அல்லது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கின்ற காலத்தில் எப்போதாவது பிராந்திய ஊடகவியலாளர்களை அனுகி பிரச்சினைகளை கேட்டறிந்தது உண்டா. 5000 ஆயிரம் ரூபாவுக்குள் ஊடகவியலாளர்களின் கெளரவத்தினை மலினப்படுத்தியிருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும்.

நான் ஊடகத்துறைக்குள் நுழைந்து 12வருடங்கள் ஆகின்றது. ஆனால் தேசத்தின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்படுத்தப்பட்ட சந்திப்பே முதலாவதாகும், இப்படி 30, 40 வருட ஊடக அனுபவமுள்ளவர்களுக்கும் இதுவே முதற்தடவையாக அமைந்தது. இந்த சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கு ஊடகவியலாளர்கள் தத்தமது நன்றிகளை தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருந்த நிலையில் கொழும்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இதே ஹோட்டலில் சஜித் பிரேமதாச சந்தித்திருந்தமை தேர்தல் சட்டங்களை மீறிய விடயம் என்பது ஞாபகமில்லாமல் போயுள்ளது லக்‌ஷ்மன் கிரியெல்லவுக்கு. எனவே இந்த மலினமான அரசியல் செய்வதனை நாடாளுமன்ற உறுப்பினர் தவிரத்துக்கொள்ள வேண்டும் என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: