(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை பொது நூலக கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடந்த சில வருடங்களாக தற்காலிகமாக இயங்கி வந்த கல்முனை மாநகர சபையின் அலுவலகப் பகுதி அங்கிருந்து இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த கீழ் தளத்திற்கு நூலகத்தின் பத்திரிகை வாசிப்புப் பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் பணிப்புரையின் பேரில் இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கல்முனை பொது நூலக கட்டிடத்தில் கல்முனை மாநகர சபை இயங்கி வந்ததால் பொது நூலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் வாசகர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பாக மேல் தளத்தில் இயங்கும் பத்திரிகை வாசிப்புப் பிரிவை வயோதிபர்கள் பயன்படுத்துவதில் கடும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளராக கடமையேற்ற கையோடு இவ்விடயத்தில் கூடிய கரிசனை செலுத்திய ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள், வாசகர்களின் நலன் கருதி மாநகர சபையின் அலுவலகப் பகுதியை துரிதமாக இடமாற்றி விட்டு, அவ்விடத்தை நூலகத்திற்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் பயனாக கடந்த வாரம் மாநகர சபையின் அலுவலகப் பகுதி நூலக கட்டிடத்தில் இருந்து இடமாற்றப்பட்டிருந்தது.
இதையடுத்தே கல்முனை பொது நூலகத்தின் வாசிப்புப் பிரிவு நூலக கட்டிடத்தின் கீழ் தளத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.
இதன்போது ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் அங்கு பிரசன்னமாகி நூலக ஒழுங்குகளை பார்வையிட்டதுடன் நூலகர் முஹம்மட் முஸ்தாக் மற்றும் உத்தியோகத்தர்களிடம் நூலகப் பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
No comments: