News Just In

7/22/2024 07:10:00 PM

சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி குடியேற்ற கிராம கொலை சம்பவம் : தலைமறைவான பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது சுனாமி குடியேற்ற பொலிவேரியன் கிராமத்தில் தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸாரால் திங்கட் கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிறு (21) அதிகாலை கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது..

இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி 62 வயதுடய மீராசாஹிப் சின்னராசா என்பவர் மரணமடைந்திருந்தார்இவ்வாறு மரணமடைந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாமனாரை தாக்கி படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் இருந்தும் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் சாய்ந்தமருது பகுதியில் இருந்தும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த பிரதான சந்தேக நபரான மருமகன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டிற்கு விசாரணைக்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்தார்.

கைதான 33 வயதான பிரதான சந்தேக நபர் உட்பட குறித்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 20 ,19,19, 18 வயது மதிக்கத்தக்க ஏனைய சந்தேக நபர்களை சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: