
சிறிலங்கா அரசாங்கத்திற்கு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக்கூடிய அளவிற்கு தகுதி இல்லை, சர்வதேச விசாரணை ஒன்றேதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் ஒரே வழியாக இருக்கும் என மட்டக்களப்பு மவாட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கடந்த (31.05.2024) மாலை படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஞானமுத்து சிறிநேசன், சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 வருடங்கள் கழிந்திருக்கின்றன.
அதற்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. இந்தக் குற்றவாளிகளை அநேகமாக கண்டவர்கள் உள்ளார்கள். யோசப் பரராசசிங்கம், சந்திரநேரு, ஆகியோர் படுகொலை செய்யப்பட்டபோதும் குற்றவாளியை அடையாளம் கண்டிருக்கின்றார்கள்.
ஒரு குள்ளமான உருவம் அந்த குற்றவாளியாக இனம்காணப்பட்டிருக்கின்றது. ஆனால் அவர்களை வெளிக் கொணர்வதற்கு மற்றவர்கள் பயம் கொள்கின்றார்கள்.
ஏனெனில் அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. சிறிலங்காவில் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்குகோ, காணாமலாக்கப்பட்டவர்களுக்கோ, இனப்பிரச்சனைக்கோ, எந்தவொருதீர்வும் காணப்படவில்லை.
இந்த நாட்டில் உள்நாட்டுப் பொறிமுறை என்பது வெறும் போலியான பொய்வார்த்தையாகவேதான் இருக்கின்றது. எனவே இப்பிரச்சனைகளுக்கெல்லாம் சர்வதேச பொறிமுறை ஊடாகத்தான் தீர்வு காணப்படல் வேண்டும்.
காணாமல் போனவர்களை மறந்து விடுங்கள் என கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் கருத்து தெரிவித்திருந்தர். அதபோல் காணாமல் போனவர்களை மண்ணைத் தோண்டிப் பாருங்கள் என விமல் வீரவம்ச அவர்களும் தெரிவித்திருந்தார்.
தமிழர்களின் பிரச்சனை சோறும் தண்ணீரும் என மகிந்தானந்த தெரிவித்திருந்தார். எனவே 75 வருடங்களாக அவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை விளங்கிக் கொண்ட விதம் என்னவெனில் ஒரு அற்ப சொற்பமான பிரச்சனைதான் இருக்கின்றது, இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக்; கூடிய அளவிந்கு லாயக்கு இல்லை என்று கூறலாம். எனவே சர்வதேச விசாரணை ஒன்றேதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் ஒரே வழியாக இருக்கும்.
இந்த நாட்டில் சட்டம் இருவகையாக இருக்கின்றது. தமிழர்களுக்கு ஒருவகையாகவும், சிங்களவர்களுக்கு ஒரு வகையாகவும் இருக்கின்றது. எனவே சட்டம் முறையாக கடைடிப்பிடப்படல் வேண்டும். என மட்டக்களப்பு மவாட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்
No comments: