News Just In

4/12/2024 01:35:00 PM

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்



ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம், கட்சியின் தீர்மானமும் முக்கியமானது என்று இலங்கைத் தமழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.

அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன். எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.

ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

No comments: