News Just In

4/12/2024 07:18:00 PM

ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று உழைப்பேன் : உதுமான்கண்டு நாபீர்.



(எஸ்.அஷ்ரப்கான், எம்.எஸ்.எம்.ஜஃபர், எம்.ஏ.றமீஸ், றியாஸ் ஆதம், ஐ.ஏ.சிராஜ், றிஸ்வான் சாலிஹு)

அம்பாறை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியினையும் கிழக்கு மாகாணத்திற்கு அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஒன்றிணையும் பெற்றுக்கொடுப்பதற்கு உத்தரவாதமளிக்கும் கட்சியோடு இணைந்து செயற்படுவதற்கு தான் தயாராக உள்ளதாக
நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.

சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக சேவையாளர் கௌரவிப்பும் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வும் அண்மையில் போரத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்குறித்த மிக முக்கியமான இரு பதவிகளையும் மக்களுக்காக பெற்றுக்கொடுப்பதற்கு முன்வருகின்ற சிறுபான்மை அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு தயாராக உள்ளேன். அத்தோடு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் ஆயத்தமாகவுள்ளேன். இதனைப் பேரம்பேசி முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முஸ்லிம் கட்சிகள் தவறுமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு குறித்த பதவிகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பேன்.

ஊடகவியலாளர்கள் உண்மைகளை எழுதுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் பணிகளை என்றும் பாராட்டுகின்றேன். அதேநேரம் ஊடகவியலாளர்கள் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் வறுமைக் கோட்டியின் கீழ் வாழும் மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களுக்குரிய வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தயாராக உள்ளேன்.

வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்களின் நிதியுதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களும் என்னிடமுள்ளது. தற்போது 32 வருடங்கள் சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் எனக்கு அரசியல் அதிகாரங்கள் கிடைக்கின்ற போது மேற்குறித்த பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும்

அரசியல் தலைவர்கள் உறங்க முடியாது. பொய் பித்தலாட்டங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. இப்போது மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து மக்களுக்கு அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி வாக்குகளை சூறையாடலாம் என நினைப்பது பகல் கனவாகும் என்றார்.

No comments: