News Just In

2/03/2024 09:32:00 PM

கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்தை ரத்துசெய்ய அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க சம்மேளனம் ஹரீஸ் எம்.பியிடம் கோரிக்கை : உடனடி நடவடிக்கைக்கு எடுப்பதாக ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு !

NOORUL HUTHA UMAR



கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்ய அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க சம்மேளனம் ஹரீஸ் எம்.பி யிடம் கோரிக்கை : உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு !

நேற்று வெளியாகியுள்ள கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்ற பட்டியலில் திருப்தி இல்லை என்றும், அந்த பட்டியலில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், கல்முனை கல்வி வலய எதிர்கால கல்வி முன்னேற்றத்தை பின்னுக்கு தள்ளும் விதமாக அந்த இடமாற்ற பட்டியல் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து இவ்விடயத்தை உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்கம் மற்றும் இலங்கையின் பல்வேறுபட்ட ஆசிரிய தொழிற்சங்கங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய கல்முனை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க சம்மேளனம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் கல்முனை செயலகத்தில் இன்று (03) கல்முனை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது தேசிய ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் முன்னிலை வகிக்கும் கல்முனை கல்வி வலயத்தில் இருந்து எவ்வித மாற்று ஏற்பாடுகள் இன்றி 233 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது கல்முனையின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய ஆபத்தை தோற்றுவிக்கும் என்றும் 2021 ஆம் ஆண்டின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் கல்முனையில் ஆசிரிய வெற்றிடம் இருக்கத்தக்கதாக மேலும் 233 ஆசிரியர்களுக்கு வெளியிடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு 37 ஆசிரியர்களே வெளியிடங்களில் இருந்து கல்முனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் செயலாகவே நோக்க முடிவதாகவும் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இந்த விடயத்தில் உடனடியாக பொருத்தமான நடவடிக்கை எடுத்து இந்த இடமாற்ற பட்டியலை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும், ஏனைய மாகாணங்களில் அமுலில் இருப்பது போன்று 2016 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தை ரத்து செய்து 2021ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தை அமுல்படுத்த அரசை கோருமாறும் கல்முனை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க சம்மேளனம் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கல்முனை கல்வி வலய புள்ளிவிபரங்கள், தகவல்களை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர், அம்பாறை மாவட்ட கல்வி மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை தான் முன்னின்று எடுப்பதாகவும், கல்முனை கல்வி வலயம் உட்பட ஏனைய வலயங்களின் விவரங்களையும் பெற்று மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கவனத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதார நிலை, ஆசிரியர்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டும் இந்த இடமாற்றத்தை ரத்து செய்வது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், ஆளுநர், கல்வியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே தான் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும் சம்மேளன பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியது டன் இது விடயமாக தான் எடுத்துள்ள அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும், ஏனைய சில பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இது விடயமாக பேசி எடுத்துள்ள உரிய வேலைத்திட்டம் தொடர்பிலும் விளக்கினார்.

இந்த சந்திப்பில் கல்முனை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்மேளன தலைவர், செயலாளர், ஆலோசகர்கள், பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு


No comments: