News Just In

2/07/2024 05:07:00 AM

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்துடன் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!



ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை உரையுடன் இன்று புதன்கிழமை (7) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் 8, 9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70(1) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.

ஐந்தாவது கூட்டத்தொடரை (புதன்கிழமை) ஜனாதிபதியின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதுடன்,காலை 10.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கை பிரகனத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 2020 ஓகஸ்ட் 20 முதல் 2021 டிசம்பர் 12 வரையும்,இரண்டாவது கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 முதல் 2022 ஜூலை 28 வரையும் இடம்பெற்றது.

மூன்றாவது கூட்டத்தொடர் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 27 வரையும் இடம்பெற்றதுடன் நான்காவது கூட்டத்தொடர் 2023 பெப்ரவரி 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் 2024.01.26 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வரை பாராளுமன்றம் 106 நாட்கள் கூடியிருந்தது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்ற விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக்கு குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் இணைப்புக் குழு தவிர்ந்த ஏனைய அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது மீண்டும் நியமிக்கப்படும்.

No comments: