News Just In

8/24/2023 11:53:00 AM

மாவட்டங்களுக்கிடையில் பெண்கள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர அனுபவப் பகிர்வு




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாவட்டங்களுக்கிடையில் பெண்கள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர அனுபவப் பகிர்வு கள விஜயம் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.

சர்வதேச தன்னார்வ தொண்டு அமைப்பான வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பெண்கள் வலையமைப்புகளுக்கு இடையிலான அனுபவப் பகிர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழனன்று 24.08.2023 இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் வலையமைப்புக்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் அலுவலர்கள் என சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கருத்துப் பகிர்ந்து கொண்ட மாவட்ட உதவிச் செயலாளர் நவேஸ்வரன், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வைப்பதில் பெண்களின் வகிபாகம் மிக முக்கியமானது. அந்த வகையில் உணவுப் பாதுகாப்பு உட்பட வாழ்வாதாரம் உள்ளிட்ட பொருளாதார அவிருத்தி நடவடிக்கைகளில் பெண்களுக்கு ஆதரவு வழங்குவதில் அரசு அக்கறை காட்டுகிறது” என்றார்.

அங்கு கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் திலீப்குமார், மாவட்டங்களின் பெண்கள் வலையமைப்புகளுக்கிடையிலான இந்த ஒருங்கிணைவு பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு அங்கீகாரம் பெற்ற தளமாக அமையும்

இதன் மூலம் பெண்களின் இயலுமை விருத்தி, பெண்களால் மேற்கொள்ளப்படும் சேவைகள், அபிவிருத்திக்கான பங்களிப்பு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்படுகின்றது.

கிராம மட்டங்களில் பெண்களை அணி திரட்டி அவர்களுக்கான தளத்தை ஏற்படுத்துகின்றபோது அங்கே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

உணவுப் பாதுகாப்பு, பொருளாதார நெருக்க, வாழ்வாதாரப் பிரச்சினைகள், பால்நிலைப் பாரபட்சங்கள் சம்பந்தமான சவால்கள் மதிப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு தீர்வுகளை எட்டவும், அதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் முடியும். இவை நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.

கடந்த காலங்களில் இவ்வாறான அனுபவப் பரிமாற்றத்தின் மூலம் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் முயற்சியில் ஒரு வழிகாட்டிக் கையேடு தயாரிக்கப்பட்டு மாவட்டச் செயலக நிருவாக அனுமதியுடன் அவற்றை நடைமுறைப்படுதர்துவதற்கான வழிமுறைகள் தொடங்கியுள்ளன. இதுவொரு தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

இரண்டு மாவட்டங்களின் பெண்கள் கட்டமைப்பை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான ஒரு அனுவபப் பகிர்வாகவும், மூலோபாய அபிவிருத்திச் திட்டங்களில்; பெண்களின் வகிபாகம், ஆற்றல்கள், ஆளுமை எதிர்காலத்தில் கருத்தாடல்கள் இடம்பெறும் நோக்கில் இந்த அனுபவ கள விஜயம் அமைந்துள்ளது.

இவை வெற்றியளிக்குமாயின் கூட்டிணைவான செயற்பாட்டின் மூலம் அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்து கொள்ள முடியும்” என்;று தெரிவித்தார்.

பெண்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து, கிராம மட்டத்தில் இருந்து பெண்களை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள்;, பாலியல் வன்முறையை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உளவள ஆற்றுப்படுத்தல், இலவச சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இங்குபு கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் அருணாழினி, திருகோணமலை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். சுவர்ண தீபானி அபேசேகர உட்பட பெண்கள் அபிவிருத்தி அலுவலர்களும் பல செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.


No comments: