News Just In

7/11/2023 03:38:00 PM

மட்டக்களப்பிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு



நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பினை முன்னெடுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பே. பிரேம்நாத் தலைமையில் இந்த பணிபகிஸ்கரிப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் (11) மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் உள்ள நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல்நீதிமன்றம் ஆகியவற்றின் வழக்குகளில் பங்கு கொள்ளாது சட்டத்தரணிகள் பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுத்தனர்.

அதனை தொடர்ந்து நீதிமன்றிலிருந்து பேரணியாக வந்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு குரல்கொடுப்போம், இனவாதத்தை கக்காதே, நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூணாகும், நீதித்துறையினை அச்சுறுத்தாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மும்மொழிகளிலுமான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை சட்டத்தரணிகள் முன் வைத்தனர்.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற சிறப்புரிமையினை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் தெரிவித்த கருத்தானது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு முற்றுமுழுதான பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பே. பிரேம்நாத் இதன் போது தெரிவித்தார்.

No comments: