News Just In

7/27/2023 10:02:00 AM

குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சி : சஜித்




ஜனாதிபதி குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவான விடயமாகும்.

இவ்வாறான சூழலில் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமா என்பது சந்தேகமே.

வடக்கு கிழக்குப் பிரச்சினை உடனடியாக எழவில்லை.பல தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இருப்பினும் இப்பிரச்சினைக்கு இதுவரை எவராலும் நடைமுறை ரீதியான தீர்வை முன்வைக்க முடியவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிக முக்கியமான காரணி நல்லெண்ணத்துடன் செயற்படுவதே ஆகும்.

ஜனாதிபதியின் இந்த முயற்சியானது குறுகிய கால அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கான வேலைத்திட்டமேயன்றி உண்மையான விருப்பத்துடன் முன்வைக்கப்படும் நேர்மையான நடைமுறைப்படுத்தல் அல்ல என்பதை நாம் அவதானிக்கலாம்.

இதற்கு முன்னரும் தற்போதைய ஜனாதிபதிக்கு இப்பிரச்சினை தொடர்பில் தலையிட்டு தீர்வுகளை வழங்குவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்தமை இரகசியமல்ல.

அத்துடன் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடமாகியும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்குவதற்கான நியாயமான அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய முயற்சிகளில் அவர் ஈடுபடவில்லை.

கடந்த சுதந்திர தினத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண தன்னிடம் தீர்வு இருப்பதாக நாட்டுக்கு உணர்த்திய ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சியிடம் ஜனாதிபதி கேட்கின்றார்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு உண்மையான விருப்பம் இருந்தால்,அவர் செய்ய வேண்டியது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினருடனும் சேர்ந்து இணங்கிய பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: