News Just In

5/03/2023 10:47:00 AM

உணவு நிலம் சுற்றாடல்தொடர்பாக கிராமிய மக்களுக்கு விழிப்பூட்டல்!






ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் உணவு நிலம் சுற்றாடல் தொடர்பாக கிராமிய மக்களுக்கு விழிப்பூட்டல் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபீப் முஹம்மது பாத்திமா சர்மிலா தெரிவித்தார்.

கிராமிய மக்களுக்கு வாழ்வும் வாழ்வாதாரமுமாக அமைந்துள்ள இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இச்செயல்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது விடயமான விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடலும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபவனியும் மட்டக்களப்பு வாவியை அண்டியுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றது.
கங்காதேவி மீனவர் கூட்டுறவுச் சங்கப் பொருளாளர் உதயகுமார் சுலோசனாவின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீனவர் சங்கத் தலைவர் எஸ். தர்மா, செயலளார் கே. மதி உட்பட பிரதேச களப்பு மீனவர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்வில் நாட்டின் கிராமிய மக்களைக் குறி வைத்துச் சுரண்டும் பல்தேசியக் கம்பனிகளின் செயல்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

அங்கு தொடர்ந்து விழிப்புணர்வூட்டலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்பாளர் சர்மிலா,பொருளாதார நெருக்கடி மிக்க தற்போதைய காலகட்டத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து கிராமிய மக்கள் குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக உணவு நிலம் சுற்றாடல்சார்ந்த விடயங்களில் மீனவ சமுதாயத்தினர் கரிசனை கொள்ள வேண்டும். தற்போது மட்டக்களப்பைச் சூழ அமைந்துள்ள மட்டக்களப்பு நெடு வாவி மாசடைந்து கொண்டு வருகின்றது.

இது இயற்கைக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. வாவி நீர் மாசடைந்து வருவதால் அதில் வளரும் மீனினங்களும் நோய்வாய்ப்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்த மீன்களை உண்ணும் மனிதர்களும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகலாம். அந்த நிலைமயைத் தவிர்த்துக் கொள்ள வாவியைத் துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேவேளை ஏற்கெனவே நாம் வாழும் நிலமும் வளியும் நீரும் மாசடைந்து விட்டன. எனவே இவற்றை நாம் பேணிப் பாதுகாக்கத் தவறினால் எமது எதிர்கால சந்ததி இப்பூவுலகில் வாழ முடியாது போய் விடும் என்றார்.






No comments: