News Just In

3/25/2023 09:16:00 AM

இலங்கைக்கு வந்த பிரபல இந்திய போதகர் திருப்பி அனுப்பி வைப்பு!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து யாழில் ஆசீர்வாத ஜெப கூட்டத்தை நடத்த தயாராக பிரபல போதகர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப குடிவரவு மற்றும் குடிகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல கிறிஸ்தவ போதகர் பால் தினகரன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வர்த்தக விசா அனுமதியில் கடந்த 15 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் உள்நாட்டு விமான மூலம் நேற்றைய தினம் (23-03-2023) இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

மானிப்பாயில் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த ஆசீர்வாத ஜெப கூட்டங்களில் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சுவரொட்டிகளை ஒட்டி கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.

யாழ் சிவபூமி மதம் மாற்றிகள் நுழையாதீர் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கவனம் செலுத்திய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வர்த்தக விசாவில் வந்து, ஜெப கூட்டங்களை நடத்துவது மற்றும் பிரதேசத்தில் ஜெப கூட்டங்களை நடத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் போதகர் போல் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்றைய தினம் பிற்பகல் 1.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கி புறப்பட்டு சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை போதகர் போல் தினகரன் எவரையும் மதம் மாற்றுவதற்காக யாழிற்கு வரவில்லை என யாழ் கிறிஸ்தவ போதகர் சாம் ராஜசூரியர் தெரிவித்துள்ளார்.

யாழில் எவரையும் மதம் மாற்றும் கூட்டங்களை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை, கடவுள் மனிதனுடைய உள்ளத்தை மாற்றுகிறார்.

பால் தினகரன் யாழில் 3 நாட்கள் ஆசீர்வாத நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தவிர்க்க முடியாத காரணத்தினால், அந்த நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளன.

மீண்டும் ஆசிர்வாத ஜெப கூட்டங்களை நடத்த திரும்பி வருவார்கள் எனவும் சாம் ராஜசூரியர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: