News Just In

2/24/2023 10:07:00 PM

ஆர்ப்பாட்டத்தில் தொடர்பில்லாத தொழிற்சங்க பிரதிந்திகளை பலவந்தமாக கைது செய்வதற்கு பொலிஸாருக்கு யார் அதிகாரம் வழங்கியது? - இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கம் கேள்வி




( ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கல்வி அமைச்சின் உள்ளே புகுந்து பலாத்காரமாக இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் நிதிச் செயலாளர் நாலக்க த சில்வா மற்றும் மேல் மாகாண செயலாளர் ஹர்சனாத்த ஆகியோரை தாக்கி கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

நீதிக்கு புறம்பாக செயல்பட போலீசாருக்கு யார் அதிகாரம் வழங்கியது? என கேட்டுஇலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் செஹான் திசாநாயக்க மற்றும்கிழக்கு மாகாண செயலாளர் கோபாலசிங்கம் சுஜிகரன் ஆகியோர் இணைந்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (24.02.2023) அவர்களால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நேற்றைய தினம் கல்வி அமைச்சின் முன்பாக பாளி பல்கலைக்கழகத்தினை மீள் ஆரம்பிக்குமாறு கோரி பிக்கு மாணவர்கள் மற்றும் அனைத்திலங்கை பல்கலைக்கழக அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பல மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதே சந்தர்ப்பத்தில் "சிங்கள மொழி மூல தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான மேல்முறையீட்டு சபை" கல்வி அமைச்சின் நான்காம் மாடியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக அங்கு வந்த பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிலேச்சத்தனமாக தாக்கி கைது செய்தனர்.

இதன் பிற்பாடு நான்காம் மாடிக்கு சென்ற போலீசார் அங்கு அரச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்க உறுப்பினர்களை எச்சரித்ததுடன் அதன் பிற்பாடு இங்கு நடந்த விடயங்களினை ஒளிப்பதிவு செய்ததாக கூறி அங்கிருந்தவர்களை தாக்கி அதில் சிலரை கைது செய்திருந்தனர்.

அத்துமீறி நுழைந்து மூர்க்கத்தனமாக நீதிக்கு புறம்பாக போலீசார் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் நிதிச் செயலாளர் நாலக்க த சில்வா மற்றும் மேல் மாகாண செயலாளர் ஹர்சனாத்த சகோதரர் ஆகிய இருவரையும் தாக்கி கைது செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நேரத்தில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த இவர்களை கல்வி அமைச்சின் உள்ளே புகுந்து பலாத்காரமாக நீதிக்கு புறம்பாக செயல்பட போலீசாருக்கு யார் அதிகாரம் வழங்கியது? ஆசிரியர்களின் நலனுக்காக அக்கறை கொண்டு இடமாற்ற சபைக்கு பங்குபற்றச் சென்ற அரச ஊழியர்கள் தாக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

இவர்களுக்கே இந்த நிலைமை எனின் சாதாரண மக்களின் நிலைமை என்ன?
நீதியை காக்க வேண்டியவர்களே நீதியை குழி தோண்டி புதைப்பது எதற்காக அல்லது யாருக்காக?

இந்த மிலேச்சத்தனமான நீதிக்கு புறம்பான செயற்பாட்டினை கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வன்மையாக கண்டிப்பதோடு இதற்கான நீதிய கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சும் போலீஸ் மா அதிபரும் ஜனாதிபதியும் நீதிமன்றமும் பெற்று தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றோம். என குறிப்பிட்டுள்ளனர்.


No comments: