News Just In

2/03/2023 07:30:00 AM

கல்முனை பிரதேச செயகத்தில் "உணவு வங்கி" செயற்திட்டம் அங்குரார்ப்பணம்!

ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க கல்முனை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் முதற்கட்ட உணவு வங்கி செயற்திட்டம் இன்று(02) கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபரின் நெறிப்படுத்தலின் கீழ் கல்முனை-01 மற்றும் கல்முனைக்குடி -11 கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது பிரதேசத்தில் கடந்த அனர்த்த காலங்களில் மக்கள் நடந்துகொண்ட விதம் பாராட்டும் படியாக இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச,இன,மத வேறுபாடுகள் இன்றி மக்கள் நிவாரண உலர் உணவு பொருட்களை வழங்கினார்கள். இந்த நிலை நீடித்திருக்க வேண்டும்.ஏனெனில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ் நிலையில் யார் வறுமையில் வாடுகிறார்கள்,யார் உணவின்றி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருக்கின்றது. பலரும் சுய கௌரவ கூச்சத்தினால் வாய்விட்டு கேட்கமுடியாமல் இருப்பதை பார்க்கும் போது கவலையாக உள்ளது. நன்றாக ஆராய்ந்து பார்த்து இந்த "உணவு வங்கி" யின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான முன்னோடியாக தான் அரசாங்கம் இவ்வாறான உணவு வங்கி செயத்திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது. எம்மில் பலர் இவ்வாறு அரசு அறிமுகப்படுத்திய உணவு வங்கி செயற்திட்டத்தினை மறைமுகமாக நடைமுறைபடுத்திப் வருகின்றனர். அவ்வாறான செயற்திட்டத்தினை அரசாங்கம் பரவலடையச்செய்து மக்களுக்கு தினந்தோறும் உணவு இல்லாத நிலைமையை உருவாக்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவில் உள்ள தனவந்தர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் ஏனைய சமூக சேவை அமைப்புக்களின் மூலம் இதற்கான நிதி மற்றும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு குறித்த மக்களுக்கு சென்றடைவதற்கு அரசாங்கம் இச் செயற்திட்டத்தை பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இச் செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு தொடர்ந்தும் இத் திட்டத்திற்கு உதவுமாறும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(சர்ஜுன் லாபீர்)

No comments: