
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மிகவும் ஆபத்தானதாகவே தான் இந்த அரசியல் அரசியல் தொழிலை பார்ப்பதாக கிழக்கு மகாகாண முன்னளர் பிரதித் தவிசாளரும் சுகாதார அமைச்சரும் தற்போதைய ஏறாவூர் நகர சபையின் உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
அகால மரணமடைந்த ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளரான அப்துல்சாலி முஹம்மத் றியாழின் அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வும் திடீர் மரணமடைந்த ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளரான அப்துல்சாலி முஹம்மத் றியாழுக்கான அனுதாபப் பிரேரணை நிறைவேற்றலும் வியாழக்கிழமை எறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தலைமையில் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபைர், குறிப்பாக அரசியல்வாதிகள் மக்கள் மத்தியிலே அரசியல் கடமைகளிலே ஈடுபடுகின்றபோது அங்கிருக்கின்ற பல நூற்றுக் கணக்கான மக்கள் தமது பல்வேறு குறைபாடுகளையும் தேவைகளையும் பிரச்சினைகளையும் சொல்வார்கள். எனவே தங்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
அவ்வாறு மக்களின் குறைகள் தீர்க்கப்படாதபட்சத்தில் அரசியல்வாதிகளை மக்கள் கடிந்து கொள்கின்றார்கள். அதேபோன்று நாம் அரசியல் செய்கின்றபோது சிலர் எங்களை ஊழல் வாதிகளாகப் பார்க்கின்றார்கள்.
சிலர் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகளாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்கள். இப்படிப் பல சவால்களை மக்கள் மத்தியிலே இருக்கின்ற அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் சூழ்நிலை காணப்படுகின்றது. அதனால்தான் அரசியலை ஒரு ஆபத்தான தொழில் என்று நான் குறிப்பிடுகின்றேன்.” என்றார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு ஏறாவூர் நகர சபையின் உறுப்பினராகத் தெரிவாகி பின்னர் இவ்வருடம் ஏப்ரில் மாதம் 28ஆம் திகதி ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டு கடந்த 26.10.2022 அன்று அகால மரணமடைந்த றியாழ் (வயது 42) மீதான அனுதாபப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
No comments: