News Just In

8/26/2022 11:23:00 AM

மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மட்டும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதில்லை; தவிசாளர் முபாறக் தெரிவிப்பு





பைஷல் இஸ்மாயில் -

கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் போன்றவை பாடசாலையின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் உயர்ச்சிக்கும் இன்றியமையாதவையாக இருக்கின்றது என குச்சவெளி பிரதேச சபை தவிசாளர்ஏ.முபாறக் தெரிவித்தார்.

புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு புல்மோட்டை மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.இக்பால் தலைமையில் (25) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மட்டும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதில்லை. அவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், சமூகத்தில் சிறந்த ஆளுமையுள்ள பேச்சாற்றல் மிக்க ஒருவராகவும், மேடைப் பேச்சு, நடனம், கலை கலாசார விழுமியங்களையும் கற்றுக்கொடுக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில அறிவை வழங்கி அவர்களுக்கு பேச்சுத்திறனையும், எழுத்துத்திறனையும் கற்றுக்கொடுக்கின்றனர். இந்த விடயங்களை பெற்றோர்களால் வழங்கிவிட முடியாது. ஒரு ஆண் ஆசிரியரைவிட பெண் ஆசிரியருக்கு பாரிய சுமைகளுண்டு. எனது துணைவியாரும் ஒரு ஆசிரியர் என்பதால், பெண் ஆசிரியர்களின் சகல விதமான சுமைகளையும், அவர்களின் அர்ப்பணிப்புக்களையும் தான் அறிவேன்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வின் பின்னர், அவர்கள் கடமையாற்றும் பாடசாலைகளிலே நியமிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன். அத்துடன் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை முடிந்தளவு நிவர்த்தி செய்வதற்கான விடயங்களையும் மேற்கொண்டு வருகின்றேன்.

பாடசாலையின் உயர்தர விஞ்ஞான பிரிவுக்கு உயிரியல் பாடம் கற்பிக்க ஆசிரியர் ஒருவர் இல்லாததனால் மாணவர்கள் பாரிய கஷ்டங்களை எதிர்கொண்டு வந்ததனால் அவர்களின் கற்றல் செயற்பாடுகளில் எந்தக் குறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எனது சபையில் கடமையாற்றும் முகாமைத்துவ உத்தியோகத்தரை சபையின் உரிய அனுமதியுடன் கற்பிக்க வழங்கியிருந்தேன்.

அந்த உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட சிறு விண்ணப்பத் தவறால் வைத்தியத்துறைக்கான அனுமதி தவறிவிட்டது. இன்று ஒரு வைத்தியராக இருக்கவேண்டியவர் ஒருமுகாமைத்துவ உத்தியோகத்தராக எனது சபையில் கடமைற்றுகிறார். இது மனவேதனைக்குரிய விடயமாகும்.

இவ்வாறானதொரு நிலைமை யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றேன். அதனால்
கல்லூரியில் உயிரியல் பாடம் கற்பிக்கும் சகோதரிக்கு தனது சொந்த நிதியில் இருந்து எனது துணைவியார் பெறுமதியான மடிகனணி ஒன்றையும், காசோலையையும் இச்சபையில் வழங்கி வைத்ததையிட்டு பெருமிதமடைகின்றேன் என்றார்.

இந்நிகழ்வுக்கு குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆர்.முஜீப், திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறீதரன் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய கல்லூரியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டர்.

இதன்போது, ஓய்வுபெற்ற ஆசிரியர்களான முஹம்மட் அஸ்ரப், பாத்திமா பஜிலியா மற்றும் நஸீமா ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டு, ஞாபகச் சின்னம் மற்றும் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


No comments: