News Just In

6/08/2022 12:35:00 PM

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செய்தி!





முதலாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. எவ்வாறாயினும், பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் பல திட்டங்கள் முன்மொழியப்பட்ட போதிலும், இன்றுவரை பொறுப்பான மற்றும் பொருத்தமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு எதுவித நடவடிக்கையும் எடுக்காமைக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU) தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றது.

பின்வரும் ஆலோசனைகளை எமது சங்கத்தின் சார்பாக முன்வைக்க விரும்புகிறோம்.
1. பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போக்குவரத்திற்காக தற்போது பயன்பாட்டில் இருக்கும் சிசுசவிய பஸ் போக்குவரத்து சேவையினை அதிகரித்தல் மற்றும் இப் போக்குவரத்து சேவையினை சிறந்த சேவையாக மாற்றி தற்போது கி:மீ ஒன்றிற்கு வழங்கப்படும் கொடுப்பனவை ரூபா 62 ஆக அதிகரித்தல்.

2. தேசிய மற்றும் மாகாண பொது சேவையில் உள்ள சிக்கலான இடமாற்ற செயல்முறையை நீக்குவதன் மூலம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் ஆசிரியர்களின் நிரந்தர வசிப்பிடத்தை கருத்தில் கொண்டு இடமாற்றங்களை மேற்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குதல்.

3.தற்போதைய பாடசாலை நேரமான காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 வரையான நேரத்தை நீடித்து, பஆடசாலை நாட்களை குறைத்தல்.

4. தினசரி நேர அட்டவணையை மறுசீரமைத்து ஆசிரியர்கள் பணிக்கு அழைக்கப்படும் நாட்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்.

5. போக்குவரத்தில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க எரிபொருள் பயன்படுத்தப்படாத துவிச்சக்கர வண்டிகள் மற்றும் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்குதல்.

6. பிரதானசாலைகளில் இருந்து பொதுப் போக்குவரத்து இடம் பெறாத சாலைகளில் வாடகை வாகனங்களில் பயணிக்கும் ஆசிரியர்களுக்கான திட்டமொன்றைத் தயாரித்தல்.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இவ்விடயங்கள் தொடர்பாக எந்த நேரத்திலும் கலந்துரையாடி தேவையான ஆதரவை வழங்குவதற்கு சங்கம் தயாராக உள்ளது என்பதை பொறுப்புடன் சுட்டிக்காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments: