News Just In

4/30/2022 06:30:00 AM

மஹிந்தவுக்கு மீண்டுமொரு நெருக்கடி! 10 பேர் கொண்ட குழு அதிரடி அறிவிப்பு

இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapakasa) தனது பதவியில் இருந்து நீங்காவிட்டால் ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழுவும் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டி இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல (Lalith Ellawala) தெரிவித்துள்ளார்.

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயாரா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டுக்காக சரியான தீமானங்களை எடுத்திருக்கின்றார். தற்போதைய நிலைமையிலும் நாட்டுக்காக தீர்மானம் எடுப்பதற்கு தயார் என்ற அறிவிப்பை எங்களுக்கு தெரிவித்திருந்தார்.

என்றாலும் பிரதமருக்கு இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு ஒருசிலர் இடமளிப்பதில்லை என்ற சந்தேகம் எமது குழுவுக்கு இருக்கின்றது.

யாராவது அவ்வாறு செய்வதாக இருந்தால், அது வேறு எதற்காகவும் அல்ல, அவர்களின் திருட்டு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காகவாகும். தங்களை பாதுகாத்துக்கொள்ள எதிர்பார்க்கும் குழுவொன்றுதான், பிரதமருக்கு தனது தீர்மானத்தை எடுப்பதற்கு இடமளிக்காமல் இருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது.

எனவே நாட்டின் தற்போதைய நிலை தங்களை பாதுகாக்கும் நேரம் அல்ல, மாறாக நாடு மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்கவேண்டும்.

அதனால், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் காலத்திற்கு ஏற்ற தீர்மானங்களை எடுத்துக்கொண்டு அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அனை கட்சி அரசாங்கம் அமைத்து நாட்டை கட்டியெழுப்ப இடமளிக்குமாறு, அனைவரிடமும் மிகவும் மரியாதையுடன் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

பிரதமரும் தனது பதவியில் இருந்து நீங்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் 10பேர் கொண்ட குழுவும் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டி வரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.

No comments: