News Just In

12/31/2021 10:24:00 AM

ஆட்சியாளர்கள் வீரவசனங்களை பேசிக்கொண்டிருக்கும் "தேங்காய்ப்பூ சண்டியர்களாகவே" இருக்கிறார்கள் -



நூருல் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ், ஏ.எல்.எம். ஷினாஸ்

எமது நாட்டில் ஊழலை ஒழிக்காதவரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டில் அதிகமாக ஊழலை பற்றி பேசுபவர்கள் ஜே.வி.பியினரே. அதுபோல முஸ்லிம் கட்சிகளில் அதிகமாக ஊழலை பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். மக்கள் அதை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அரச பணத்தை கொள்ளையடித்தால் எனக்கென்ன என்று இருந்த மக்களுக்கு இப்போதுதான் புரிகிறது அந்த கொள்ளைகள் எங்களின் அடிவயிற்றில் விழுந்த அடியென்று. முந்தைய காலங்களில் 100 ரூபாய்க்கு 20 ரூபாய் ஊழல். இப்போது 20 ரூபாய்க்கு 200 ரூபாய் ஊழல் என்ற நிலை வந்துவிட்டது. மக்களுக்கு செய்யும் சேவைகளை விட பலமடங்கு ஊழல்கள் நடக்கிறது. தேசப்பற்றாளர்கள் என்றவர்கள் தேசத்தை சாப்பிட்டு கைகழுவி விட்டார்கள் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

மருதமுனை கடற்கரை விடுதியொன்றில் வியாழக்கிழமை (30) இரவு கல்முனை பிராந்திய பொறுப்பாளரும் கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான மௌலவி ஏ.ஜீ.எம். நதீர் (நளீமி)யின் தலைமையில் நடைபெற்ற சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் இங்கு கருத்து வெளியிட்ட அவர்,

சர்வதேச பண நிதியத்திடம் செல்ல மாட்டோம். எங்களுக்கு முதுகெலும்பு உள்ளது என்று எமது நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் எவ்வித பலமுமில்லாமல் வெறும் வீரவசனங்களை பேசிக்கொண்டிருக்கும் "தேங்காய்ப்பூ சண்டியர்களாகவே" இருக்கிறார்கள். எமது நாட்டை கொள்ளையடிக்கவும், ஊழல், மோசடிகளிலிருந்து தப்பித்து கொள்ளவும், தங்களின் பதவிகளை பாதுகாத்து கொள்ளவும் பாவிக்கப்படும் பிரதான விடயமே பிரிவினைவாதம். மத, மொழி, இன, பிரதேச ரீதியிலான பிரிவினைவாதங்கள் இனி இந்த நாட்டுக்கு சரிப்பட்டு வராது என்று மக்கள் உணரும் காலம் வந்துள்ளது. இவ்வளவு காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள் பொய்யென்று அம்பலமாகி வருகிறது. தேசப்பற்றாளர்கள் என்ற பலரும் தேசத்துரோகத்தை செய்துள்ளார்கள். சீனிக்கொள்ளை, அன்டிஜன் மோசடி, உரக்கொள்ளை என பட்டியல் நீள்கிறது. தேசப்பற்று என்பது சுதந்திர தினத்தன்று வெள்ளையாடை அணிந்து, நெஞ்சை நிமிர்த்தி நின்று தேசிய கொடியின் முன்னால் நின்று தேசிய கீதம் இசைப்பதல்ல. அது போலியானது. இந்த நாடு சுரண்டப்படும் போது கவலை வரவில்லை என்றால் தேசப்பற்று போலியாகிறது.

சாதாரணமாக தனிநபர் வங்கிக்கடனெடுப்பதற்கே நிறைய நிபந்தனைகளை வங்கிகள் விதிப்பது போன்று ஒரு நாடு இன்னுமொரு நாட்டிடமிருந்து கடன் பெற நிறைய நிபந்தனைகளை விதிப்பது நியதி. சில நேரங்களில் நமக்கு சங்கடமான நிபந்தனைங்களை கூட அவர்கள் முன்வைக்கலாம். அதனையும் கடந்தே கடன் பெற்று நாட்டை முன்னேற்ற வேண்டியுள்ளது. எமது நாட்டில் யுத்தம், இனவாத, மதவாத, அரசியல் அனர்த்தங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், ஈஸ்டர் தாக்குதல் என தொடர்ந்தும் பல சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளோம். எமது நாட்டை பாதுகாத்து மீட்டெடுக்க மிகப்பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டிய தேவை அதிகாரமுள்ளவர்களுக்கு இருக்கிறது.

மக்கள் நலனில் அக்கறைகொண்டவர்களுக்கு இப்போதைய சூழல் கவலையை தோற்றுவித்துள்ளது. உண்மையில் மக்களை நேசிக்கும் அரசியல்வாதிகள் இன்றைய சூழ்நிலையில் நாட்டின் நிலையை பார்த்தால் தூங்க முடியாது. அந்த விடயத்தை துரதிஷ்டவசமாக பார்க்க முடிவதில்லை. என்றாலும்

ஒவ்வொரு காலையில் ஏழும் போதும் மக்கள் அரசியல் விழிப்புணர்வுடனையே எழுகிறார்கள். இன்றும் பால்மா விலையேற்ற செய்தியுடன்தான் நாம் எழுந்தோம். இப்படி பல செய்திகளின் மூலம் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவருகிறார்கள். காலங்களுக்கு முன்னாள் மக்கள் அரசியலில் ஈடுபாடு காட்டாமல் வெறுப்புடன் இருந்துவந்தார்கள். ஆனால் இப்போது அரசியலானது ஒவ்வொருத்தரின் அடிவயிற்றில் கைவைத்துள்ளதால் மக்கள் அரசியலை ஒவ்வொருநாளும் உற்றுநோக்கி அவதானிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியுள்ளது. அதில் இப்போதும் யாரும் விதிவிலக்கணவர்கள் அல்ல. பணவீக்கம் அதிகரித்து நாட்டில் பணத்திற்கு பெருமானமில்லாத நிலை உருவாகியுள்ளதை நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது. நாட்டில் நடக்கும் சம்பவங்களையும், நாட்டின் நிலையையும் பார்க்கும் போது எல்லோரும் அரசியலை ஆழமாக நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஜனவரியில் நாட்டின் நிலை என்னவாகும் எனும் பயங்கரமான எதிர்வுகூறல்கள் வந்தவண்ணமே உள்ளது. மத்திய வங்கி ஆளுநருக்கு கூட நாட்டின் பொருளாதார நிலையை நம்பிக்கையுடன் பேச முடியாதுள்ளது.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஏ.எல்.எம். ஸபீல் (நளீமி), அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம். மஸீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். ரஜாப்தீன், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம். ஸியாத், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜஹான், உட்பட ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்


No comments: