News Just In

11/03/2021 06:41:00 AM

எமக்கு ஆதரவு வழங்கிய மக்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள் - பிரதமர் கவலை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இனவாத, அடிப்படைவாத கொள்கைகளுடைய அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். சகோதர இனத்தவர்களை புறக்கணிக்க வேண்டும் என ஒருபோதும் கருதவுமில்லை, குறிப்பிடவுமில்லை.

சிறந்த தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை ஒன்றிணைத்து அரசியலில் முன்னேற்றமடைவது குறித்து பொதுஜன பெரமுன அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியவுடன் மக்கள் மத்தியிலான அரசியலில் இருந்து விலகியுள்ளோம். அதன் காரணமாக ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது. எமக்கு ஆதரவு வழங்கிய மக்கள் தற்போது பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள்.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரச அதிகாரிகள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின்  பிர்ச்சினைகளை ஆராய அரசியல்வாதிகள் நேரடியாக மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் என்னுடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்களை ஒருபோதும் ஒதுக்கி வைக்க போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 5 ஆண்டு பூரண விழா செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் அதிதியாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் தோல்வியை தொடர்ந்து பெரும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டது.

புதிய கட்சி பிரதான தேசிய தேர்தல்களில் வெற்றிபெறும் என அப்போது எவரும் நம்பவில்லை. அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் பொதுஜன பெரமுன முன்னேற்றமடைவதற்கு இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஆட்சியதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது, மக்களின் மனங்களை எவ்வாறு வெல்வது குறித்து தற்போதைய அரசியல் கட்சிகள் பொதுஜன பெரமுன கடந்து  வந்த ஐந்து வருட காலத்தை மீட்டிப்பார்க்க வேண்டும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மாத்திரமல்ல, ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போதும் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எதிர்க்கட்சியாக பதவி வகிக்கும் போது திகன கலவரம், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் போது மக்கள் மத்தியில் நேரடியாக சென்றோம். அப்போதைய நெருக்கடியான சூழ்நிலையை அரசியலாக்கி அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவில்லை. பல்வேறு சவால்களை அக்காலக்கட்டத்தில் எதிர்க்கொண்டோம்.

2018 ஆம் ஆண்டு இடைக்கால அரசாங்கத்தில் வெளிநாடுகளின் அழுத்தம் எந்தளவிற்கு நாட்டின் நடைமுறை அரசியலில் காணப்படுகிறது என்பது வெளிப்பட்டது.

பாராளுமன்ற கலரியில் வெளிநாட்டு தூதுவர்கள் கூடியிருந்தனர். அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகள் பாராளுமன்றில் முன்னெடுக்கப்பட்ட போது அவர்கள் கைத்தட்டினார்கள் இவ்வாறான பின்னணியில் தான் பொதுஜன பெரமுன 2019 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.

மக்களின் பிரச்சினை குறித்து அரசியல்வாதிகள் அவதானம் செலுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அரசியலில் இருந்து விலகியுள்ளோம்.

இதன் காரணமாகவே ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்க போராட்டம்,விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை அரச அதிகாரிகளிடம் மாத்திரம் ஒப்படைக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகளும் மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்.

எமக்கு வாக்களித்த மக்கள் இன்று பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும். கெப்பித்திகொல்லாவ குண்டு வெடிப்பின் போது சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினேன்.

அதேபோல் பேருவளை, திகன மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் இடம் பெற்ற இனகலவரம், ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் போதும் விரைந்து மக்கள் மத்தியில் சென்றேன். ஆனால் தற்போதைய பிரச்சினைகளின் போது அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வதை காண முடியவில்லை.

அரசாங்கத்தில் பல கட்சிகள் கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளன. கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற வேறுப்பாடுகள் கிடையாது.

கொள்கை மற்றும் இலக்கு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.நெருக்கடியான சூழ்நிலையில் எம்முடன் இருந்தவர்களை ஒருபோதும் ஒதுக்கி வைக்க முடியாது.

2015ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய நாட்டை நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தோம்.ஆனால் 2019ஆம் ஆண்டு ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்கும் போது அனைத்தும் தலைகீழாக காணப்பட்டது.

சுதந்திரத்தை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை சர்வதேச அரங்க குற்றவாளியாக்கும் செயற்பாடுகளும், நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாறுப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தவறான தீர்மானங்கள் அனைத்தையும் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மாற்றியமைத்தோம்.

சர்வதேசத்துடன் மோதும் போது ஏற்படும் சவால்களை எதிர்பார்த்திருந்தோம். எக்காரணிகளுக்காகவும் நாட்டை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டோம். அரசியலை புறக்கணித்த இளைஞர் யுவதிகள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மீது நம்பி;க்கை கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தினார்கள். தேர்தல் காலத்தில் சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி சுற்றுசூழலை மாசுப்படுத்தும் கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் சுவர்களை அலங்கரித்தார்கள்.

இன்று அவர்கள் எங்கே, நாட்டை விட்டு வெளியேற குடிவரவு , குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக காத்திருக்கிறார்கள். இதற்கான காரணத்தை அறிய வேண்டும். அவர்களின் தேவைகள் பூரணப்படுத்தப்பட வேண்டும். அதன் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இனவாத,அடிப்படைவாத தமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபணியாமல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளோம்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசியலில் வெற்றியடைய வேண்டும் என ஒருபோதும் குறிப்பிடவுமில்லை, கருதவுமில்லை. சிறந்த தமிழ்,முஸ்லிம் சமூகத்தினரை ஒன்றிணைத்து அரசியலில் முன்னேற்றமடைவது பொதுஜன பெரமுனவின் பிரதான இலக்காக காணப்பட வேண்டும் என்றார்.

No comments: