News Just In

11/03/2021 06:52:00 AM

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவின் நெகிழ்ச்சி செயல்!

வவுனியாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களைத் தனது செயற்பாட்டின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண (Buddhika Pathirana) நெகிழ்ச்சியடைச் செய்துள்ளார். வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடனான கூட்டம் ஒன்று நேற்று  இடம்பெற்றது. இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara), நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ண, புத்திக பத்திரண, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

இதன்போது வவுனியா வடக்கு பிரதேசத்திலிருந்து வருகை தந்த போரால் பாதிக்கப்பட்ட விசேட தேவைக்குட்பட்ட முதிய பெண் ஒருவர் தனக்கும், தனது மகன் ஒருவருக்கும் போரால் கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மலசல கூடத்தைப் பயன்படுத்த முடியாது உள்ளது. மாற்று மலசலகூடம் ஒன்று தேவையாகவுள்ளது. எனது வீடும் கட்டி அரைகுறையில் உள்ளது. இதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா எனக் கேட்டதுடன், உதவி கேட்ட கடிதத்தை அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இணைப்பாளரிடம் வழங்கியிருந்தார்.

இதன்போது மேடையிலிருந்து புத்திக பத்திரண எம்.பி உடனடியாக அந்த கடிதத்தைத் தருமாறு பெற்றுக் கொண்டதுடன், மேடையிலிருந்து இறங்கி வந்து அந்த அம்மா அருகில் சென்று அவருடைய கடிதத்தில் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு உதவியை வழங்குவதாகவும் தெரிவித்து தனது பிரத்தியேக செயலாளரிடம் அதனை ஒப்படைத்தார். அத்துடன், அங்கு உதவி கோரி வந்த மக்களிடம் நேரடியாகத் தானே சென்று அவர்கள் அருகில் அமர்ந்து இருந்து அவர்களது கோரிக்கைகளையும் எழுதிப் பெற்றுக் கொண்டார்.

தென்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வவுனியா வருகை தந்து தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாது அருகில் சென்று அவர்களது பிரச்சனைகளைக் கேட்டு அதனைத் தீர்ப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கியமை போரால் பாதிக்கப்பட்ட வவுனியா மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

No comments: