News Just In

11/01/2021 09:02:00 PM

எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேசப்பற்றாளராகவும் ஆட்சிக்கு வந்தபின் தேசதுரோகியாகவும் இருக்க முடியாது - வாசுதேவ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றினைந்துள்ளோம் என்ற காரணத்திற்காக பேச்சு சுதந்திரம் மறுக்கப்படவில்லை. நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு மக்கள் பிரநிதிகளுக்கு உண்டு. அரசியல் அனுபவமில்லாதவர்களே எமக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எச்சவாலையும் எதிர்க்கொள்ள தயார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது தேசப்பற்றாளர்களாகவும், ஆட்சிக்கு வந்த பின் தேசதுரோகிகளாகவும் எம்மால் செயற்பட முடியாது என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் செயற்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளோம். ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒன்றினைந்துள்ளோம் என்ற காரணத்தினால் பேச்சு சுதந்திரம் மறுக்கப்படவில்லை. தேசிய வளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் போது அது குறித்து எமது நிலைப்பாட்டை குறிப்பிடுவதற்கு எமக்கு முழு அதிகாரமுண்டு.

யுகதனவி ஒப்பந்தம் எதிர்காலத்தில் நாட்டுக்கு பாதகமானதாக அமையும் என்பதற்காகவே அது குறித்து நாட்டு மக்களிடம் பகிரங்கமாக அறிவித்துள்ளோம். அது எமது கடமை. நிகழ்கால வரப்பிரசாதத்திற்காக எதிர்காலத்தை காட்டிக் கொடுக்க எம்மால் முடியாது.

அரசாங்கத்தின் தீர்மானத்தை அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு எதிர்ப்பதற்கு தற்துணிவு இருக்க வேண்டும், அது எமக்கு உண்டு. மனச்சாட்சிக்கு விரோதமாக எம்மால் செயற்பட முடியாது. எமது கருத்தை தொடர்ந்து எமக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை நன்கு அறிந்தே களமிறங்கியுள்ளோம்.

அரசியல் அனுபவமில்லாதவர்களே எமக்கு எதிராக கருத்துரைத்துக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் போது தேசப்பற்றாளர்களாகவும், ஆட்சிக்கு வந்த பின்னர் தேச துரோகிகளாகவும் எம்மால் செயற்பட முடியாது. இனி வரும் சவால்கள் அனைத்தையும் எதிர்க்கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான 11 பங்காளி கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரானது, அரசாங்கம் கடந்த கால அரசாங்கத்தை காட்டிலும் மோசடியானது என பங்காளிகட்சியின் தலைவர்களாக வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் குறிப்பிட்ட கருத்துக்கு ஆளும் தரப்பின் ஏனைய உறுப்பினர்கள் கடுமையான அதிருப்தியை  வெளியிட்டுள்ளார்கள்.

அவர்களது அமைச்சு பதவிகளை பறிக்க வேண்டும் எனவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அரசாங்கத்திடமும், பொதுஜன பெரமுன கட்சியிடமும் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: