News Just In

11/18/2021 11:03:00 AM

புதிய பாதீட்டுக்கு எதிரணி எம்.பி எரான் விக்ரமரத்ன கடும் எதிர்ப்பு!

தற்போது பசில் ராஜபக்சவால் கொண்டுவரப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு தமது ஆதரவு ஒருபோதும் கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (17) இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி மட்டுமல்ல, வறுமையின் பக்கமும் நாடு பயணிக்கின்றது. நிதி அமைச்சருக்கு ஏழு மூளைகள் இருப்பதாகக் கூறினார்கள், அரசியல் அமைப்பை மாற்றி அவர் அதிகாரத்தை கைப்பற்றினர்.

அவ்வாறான நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை மோசமான,தோல்வி கண்ட ஒரு வரவு செலவு திட்டம் என்றே நாம் கூறுவோம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. சட்ட விரோதமாக பல விடயங்களை இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் இறுதி மூச்சை பிடித்துக்கொண்டுள்ளது. நாட்டின் வரி மேலும் 45 வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறு வரிகளை சுமத்தினால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது.

எனவே வரவு செலவுத் திட்ட யோசனைகளை மீண்டும் கருத்தில் கொண்டு திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்” என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: