News Just In

11/02/2021 06:40:00 PM

சினோபார்ம் தடுப்பூசியின் பயன் குறைவடைகின்றது ! சினோபார்ம் பெற்றவர்களுக்கு 3 ஆம் கட்ட தடுப்பூசி விரைவில் - வைத்தியர் ரஜீவ் டி சில்வா

இலங்கையில் உபயோகிக்கப்படுகின்ற கொவிட் தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்ததாகும். இதன் மூலம் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு 6 மாதங்களின் பின்னர் குறைவடையத் தொடங்கும் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு துரிதமாக மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் ரஜீவ் டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் உபயோகிக்கப்படுகின்ற கொவிட் தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியே செயற்திறன் குறைந்ததாகும். எனவே இதன் மூலம் கிடைக்கப் பெறும் பாதுகாப்பு குறிப்பிட்ட காலத்தில் குறைவடையத் தொடங்கும் வெளிநாட்டலுவல்களின் தரவுகள் மற்றும் பேராசிரியர் நீலிகா மலவிகேவினுடைய ஆய்வுகளின் அடிப்படையில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் அதன் மூலம் கிடைக்கப் பெறும் பாதுகாப்பு குறைவடையும் என்பது தெரியவந்துள்ளது.

நீலிகா மலவிகேவினுடைய ஆய்வில் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட சகல வயது பிரிவினருக்கும் 3 மாதங்களின் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் மூலக்கூறுகளின் அளவு குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 - 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்றாம் கட்ட தடுப்பூசியை செயலூட்டியாக வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்திக் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதே வேளை பைசர் மற்றும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி , அறிகுறிகள் தென்பட்டாலும் 6 மாத காலத்திற்கு நோய் தாக்கத்தின் தீவிர நிலைமையை அடைதல் மற்றும் மரணமடைதல் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவுகளின் அடிப்படையில் அவதானிக்கும் போது சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி இன்றியமையாததாகும்.

எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் , நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கும் முன்னுரிமையளித்து மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைக்கிறது. காரணம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டாலும் , பெறா விட்டாலும் கொவிட் தொற்றினால் பாதிப்படையக் கூடிய வாய்ப்புக்கள் இந்த வயது பிரிவினருக்கே அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களுக்கு மாத்திரமின்றி 60 வயதை விடக் குறைந்த நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை துரிதமாக வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

முதல் இரு கட்டங்களாக எந்த தடுப்பூசியை பெற்றிருந்தாலும் , மூன்றாம் கட்டமாக பைசர் அல்லது அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியை வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு மேலும் அதிகரிக்கும் என்ற ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் இரு கட்டங்களாகவும் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசியை வழங்குவதே மிகப் பொறுத்தமானது.

முதல் இரண்டு கட்டடங்களாகவும் பைசர் தடுப்பூசியையே பெற்றுள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு 6 - 8 மாதங்களின் பின்னர் மூன்றாம் கட்டமாகவும் பைசர் தடுப்பூசியையே வழங்க முடியும். எனினும் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

No comments: