News Just In

10/23/2021 05:48:00 PM

கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள் அமைச்சர் வீரசேகரவின் கவனத்திற்கு கொண்டுவந்தார் இரா. சாணக்கியன், M P


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 'பொலிஸ் அராஜக' சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையிலும், நேற்றைய (22.10.2021) ஏறாவூர் சம்பவத்தைப்போன்ற வலுவான காணொளி ஆதாரங்களையுடைய ஒருசில சம்பவங்களே வெளிச்சத்திற்கு வருகின்றன.

இத்தகைய நிலைவரத்தில் மட்டக்களப்பில் கடந்த ஒருமாதகாலத்தில் பதிவான பொலிஸ் அராஜகங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மீண்டுமொருமுறை அமைச்சர் சரத் வீரசேகரவின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றேன் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  இன்று தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி பகுதியில் நேற்று மற்றுமொரு பொலிஸ் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்குப்போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கில்லை என்றும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸ்நிலைய வீதிப்போக்குவரத்து பொலிஸ் பாதுகாவலர் ஒருவரால் வீதியில்வைத்து மிகமோசமாகத் தாக்கப்படும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

'மட்டக்களப்பில் பொலிஸ் அராஜகம் தொடர்கின்றது. அமைச்சர் சரத் வீரசேகர அமைதிகாக்கிறார்' என்ற வசனங்களுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று இரவு 7.30 மணிக்கு மேற்படி காணொளியை அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து அந்தக் காணொளி சமூகவலைத்தளங்களில் மிகவேகமாகப் பரவிய நிலையில், அரசியல்வாதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூகவலைத்தளப் பயனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறித்த பொலிஸ் பாதுகாவலரின் நடத்தை குறித்து தமது கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் 'பொலிஸ் அராஜகத்தை' வெளிப்படுத்தும் குறித்த காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளிச்சத்திற்குக்கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் இச்சம்பவம் குறித்து வினவியபோது   'இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் பாதுகாவலரை பணியிலிருந்து இடைநிறுத்தியிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் தெரிவித்தார்.

இதனையொத்த மற்றுமொரு சம்பவமொன்று நேற்று மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி பகுதியிலும்  பதிவாகியுள்ளது. வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற ஒருவர் பொலிஸ் அதிகாரியினால் மிகமோசமாகத் தாக்கப்பட்டிருக்கின்றார். இருப்பினும் அதற்கான போதிய ஆதாரங்கள் எம்மிடம் இல்லாததன் காரணமாக அச்சம்பவத்திற்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை இல்லை.

அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய 'பொலிஸ் அராஜகச்' சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவருகின்றன. ஆனால் மேற்குறித்தவாறான சில வலுவான காணொளி ஆதாரங்கள் காணப்படுகின்ற சம்பவங்கள் மாத்திரமே வெளிச்சத்திற்கு வருகின்றன. எனவே அமைச்சர் சரத் வீரசேகரவுடன் தொடர்புகொண்டு பேசியபோது கடந்த ஒருமாதகாலத்தில் மட்டக்களப்பில் பதிவான பொலிஸ் அராஜகங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மீண்டும் எடுத்துரைத்தேன். அவை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு அதிகாரியினால் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இருப்பினும் அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தற்போதுவரை நீதி வழங்கப்படவில்லை. அதேபோன்று வவுணதீவில் நபரொருவர் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம், விதுஷன் சந்திரன் என்ற இளைஞர் பொலிஸ் காவலின் கீழ் உயிரிழந்த சம்பவம் உள்ளடங்கலாக பல்வேறு பொலிஸ் அராஜகச் சம்பவங்கள் தொடர்பில் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை. ஆனாலும் நாம் அதற்கான அழுத்தத்தைத் தொடர்ச்சியாக வழங்குவோம்' என்று குறிப்பிட்டார்.

இந்த ஏறாவூர் சம்பவத்தை இனவாத அடிப்படையில் அணுகக்கூடாது என்றும் குறித்த பொலிஸ் அதிகாரி தெற்கில் இருந்திருந்தாலும் அத்தகைய நடத்தையையே வெளிப்படுத்தியிருப்பார் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர கூறுகின்றாரே? என்ற வினாவுக்கு, அந்த பொலிஸ் அதிகாரி தெற்கிலும் இத்தகைய நடத்தையை வெளிப்படுத்துபவராக இருக்கக்கூடும். ஆனால் தெற்கில் பொது இடமொன்றில் இவ்வாறான சம்பவம் பதிவாகும்போது, சூழ்ந்திருக்கக்கூடியவர்கள் அதில் தலையிட்டு தவறைத் தட்டிக்கேட்கக்கூடிய மனநிலையைக் கொண்டிருக்கின்றார்கள் என இரா. சாணக்கியன் பதிலளித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும்போது நிலவரம் வேறாக இருக்கின்றது. அங்கு பெரும்பான்மையின பொலிஸ் அதிகாரியொருவர் தவறிழைத்தாலும்கூட, அவரை எதிர்ப்பதால் தமக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று வடக்கு, கிழக்கு மக்கள் அஞ்சுகின்றார்கள். ஏறாவூர் சம்பவத்திலும் பலர் சுற்றிநின்று வேடிக்கை பார்க்கின்ற போதிலும், அவர்கள் அந்தப் பொலிஸ் அதிகாரியைத் தட்டிக்கேட்க முற்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தான் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

No comments: