News Just In

10/23/2021 06:01:00 PM

சீன உர நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவு!


வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியினால் சின்டாவ் சீன நிறுவனத்திற்கும், அதன் உள்நாட்டு முகவருக்கும்  மற்றும் மக்கள் வங்கிக்கும்  எதிராக வணிக மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் தடை உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கரிம உரத்தை சீன நிறுவனம் இலங்கைக்கு அனுப்ப வேண்டியிருந்த போதிலும், அவற்றில் நுண்ணுயிரிகள் இருக்கலாம் என்று குறித்த சீன நிறுவனம் தனது கப்பல் ஆலோசனையின் (shipping advice) போது ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை உரக் கம்பனி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை மூலம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் சில பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா மற்றும் பிற உயிரினங்களின் உள்ளமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாய அமைச்சினால் ஒப்பந்த நடைமுறை மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஏற்றுமதியின் ஒரு பகுதியாகும்.

அதன்படி, இந்த தடையுத்தரவின் ஊடாக சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co. க்கு திறந்த கடன் கடிதத்தின் கீழ் மக்கள் வங்கியினால் எவ்வித கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது.

குறித்த சீன நிறுவனம் மற்றும் அதன் உள்நாட்டு முகவருக்கு கடன் கடிதத்தின் கீழ் எந்தவொரு கொடுப்பனவையும் பெறுவதைத் தடுக்கும் வகையில் வணிக மேல் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: