News Just In

8/07/2021 07:13:00 AM

எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் சிலர் எங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்...!!


காணொளி- https://youtu.be/yz8DjhE9y9E
எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் சிலர் எங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று (6) மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தனர். மேலும்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவிக்கையில், 'எங்களது தகவல்களை புத்தகம் செய்து வெளியிடவுள்ளோம் என்று கூறி பெற்றுச் சென்றவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்திற்கு சோரம்போயுள்ளனர்.

வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக 12 வருடங்களாக எங்களது உறவுகளைத் தேடும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நீதிப் பொறிமுறையிலோ, உள்ளக விசாரணைப் பொறிமுறையிலோ எந்தவித நம்பிக்கையும் இல்லாத நிலையில் 2018ம் ஆண்டு பங்குனி மாதம் தொடக்கம் ஐநா சபையினை நாடி எங்களது பிரச்சினைகளை நாங்களே சென்று கதைத்துவருகின்றோம்.

எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடம் சில நிறுவனங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பதிவுகளை புத்தகம் வெளியிடப் போகின்றோம் என்று கூறிப்பெற்றுக் கொண்டு அதனை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். எழும்புத் துண்டுக்கு விலைபோகும் எங்களது சில உறவுகள் இதனை பணத்துக்கு விற்பனை செய்கின்றனர். எங்களது தகவல்களை புத்தகம் செய்து வெளியிடவுள்ளோம் என்று கூறி பெற்றுச் சென்றவர்கள் இன்று இலங்கை அரசாங்கத்திற்கு சோரம்போய் அவர்களிடம் விற்றுவருகின்றனர்.

இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையும் இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். தற்போதுள்ள ஜனாதிபதியின் காலத்தில்தான் எங்களது உறவுகளை ஒப்படைத்திருந்தோம். அவரது காலத்திலேயே ஆயிக்கரணக்கான உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

சரணடைந்தவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் யாரும் உயிருடன் இல்லையென்று ஜனாதிபதியும் அவருடன் உள்ள அமைச்சர்களும் கூறிவரும் நிலையில் அவர்களிடம் சென்று எங்களது பிரச்சினைகளை கதைப்போமானால் நாங்கள் உறவுகளை இழந்தவர்கள் என்ற அடிப்படையில் சோரம் போனவர்களாகவே கருதப்படுவோம் என்ற காரணத்தினால்தான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.

அனைத்துலக நீதிமன்றத்திற்கு எங்களது பிரச்சினைகளை நாங்கள் எடுத்து செல்லவிருக்கின்றோம். சில அமைப்புகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இல்லாதவர்களை ஜனாதிபதியிடம் அழைத்துச்சென்று எங்களது போராட்டத்தினை கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே நீங்கள் யாரிடமும் சோரம்போக வேண்டாம். இன்று ஒவ்வொருவருவம் தமது உறவுகளை கண்ணீருடன் தேடிவரும் நிலையில் நாங்கள் ஒவ்வொரு உறவுகளையும் இழந்துவருகின்றோம். அவர்களின் இறுதிமூச்சுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெறுமதியான உயிருக்கு மதிப்பளித்து நாங்கள் சோரம்போகாமல் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.' - என்றார்.

No comments: